நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 20/05/2025 | Edited on 20/05/2025

விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ். இவர் கடந்த மார்ச் மாதம் விமானம் மூலம் துபாயில் இருந்து பெங்களூரூவுக்கு 14.8 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கடத்தி வந்தார். இதையடுத்து அவர் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தலில் ரன்யா ராவின் நண்பரும் தெலுங்கு நடிகருமான தருண் ராஜூ மற்றும் தொழிலதிபர் சாகில் ஜெயின் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்து அவர்களையும் அதிகாரிகள் கைது செய்தனர். மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு ரன்யா ராவ் மற்றும் தருண் ராஜூ ஆகிய இருவரது தரப்பில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம், ரன்யா ராவுக்கும் தருண் ராஜுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது இருவரும் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது, இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது, அனைத்து நீதிமன்ற விசாரணையிலும் கட்டாயம் ஆஜராக வேண்டும், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும், ஆதாரங்களை சிதைக்கவோ அல்லது சாட்சிகளை பாதிக்க முயற்சி செய்யவோ கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மேலும் ரூ. 2 லட்சம் பிணை பத்திரமும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஜாமீன், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தவறியதையடுத்து வழங்கப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கப்பட்டாலும் ரன்யா காவலில் தான் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. அவர் மீது அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் வெளியே வரமுடியாது என சொல்லப்படுகிறது.