
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 20/05/2025 | Edited on 20/05/2025
ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இந்த சூழலில் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தி இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவென்றும் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எடுத்த முடிவென்றும் கூறியிருந்தார். பின்னர் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இரண்டு பேரும் ஆஜராகி விளக்கமளித்தனர். இருப்பினும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நிலுவையில் இருக்கிறது.
இதனிடையே ரவி மோகனின் விவகாரத்து முடிவிற்கு பெங்களூரூவை சேர்ந்த பாடகி கெனிஷா தான் காரணம் என ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் நக்கீரனுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார். அதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்திருந்தார். இந்த தகவலை ரவி மோகன், மறுத்திருந்தார். பின்பு பாடகி கெனிஷாவும் ரவி மோகனின் விவாகரத்து முடிவிற்கு நான் காரணமில்லை என விளக்கமளித்திருந்தார். அதன் பிறகு இந்த விவகாரம் அமைதியாக இருக்க சமீபத்தில் ரவி மோகனும் கெனிஷாவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்வில் ஜோடியாக கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக மீண்டும் விவகாரம் பெரிதானது. இருவரும் ஏற்கனவே வந்த தகவல்களை மறுத்த நிலையில் தற்போது ஒன்றாக பொதுவெளியில் தோன்றியது கோலிவுட்டில் பேசு பொருளாக மாறியது.
இது தொடர்பாக ஆர்த்தி சமீபத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “அப்பா என்பது உறவுமட்டுமல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு. இன்று எங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் என் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. என்னை அவரது முன்னாள் மனைவி என்று ஊடகவியலாளர்கள் அடையாளப்படுத்த வேண்டாம்” எனக் குறிப்பிட்டு ரவி மோகன் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இவருக்கு நடிகைகள் குஷ்பு, ராதிகா உள்ளிட்ட சிலர் ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரவி மோகன் ஆர்த்தி கூறுவது பொய் குற்றச்சாட்டு என நீண்ட அறிக்கை வெளியிட்டார். அதில் கெனிஷா பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதாவது, வெறுங்காலுடன் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய போது கெனிஷாதான், துணை நின்றார். அவர் தான் எனக்கு ஒளி கொடுத்தவர். அவருடைய குணத்துக்கும் தொழிலுக்கும் சிறு அளவில் கூட அவமரியாதை ஏற்பட நான் அனுமதிக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி இருவரும் தங்களது தரப்பு நியாயங்களை அறிக்கையாக வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர்.
இதனை தொடர்ந்து ஆர்த்தியின் தாயாரான தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். அதில், “ரவி மோகன் தன்னுடைய தயாரிப்பில் நடித்த படங்களின் வெளியீட்டின் போது என்னுடைய கடன்களுக்காக அவரை பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை” எனக் குறிப்பிட்டார். மேலும் அவருடைய பேர குழந்தைகளுக்காக ரவி மோகனும் அர்த்தியும் இணைந்து வாழ வேண்டும் என விருப்பப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ஆர்த்தி தற்போது மீண்டும் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ள இந்தக் காலத்தில் என்னைச் சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகள் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படிச் செய்துவிட்டது. ஒரு முறை கடைசியாக அனைவருக்கும் உண்மையைச் சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.
எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம். எங்களைப் பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல. வெளியில் இருந்து வந்த ஒருவர் தான். ‘உங்கள் வாழ்வின் ஒளி’ என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தார் என்பதே உண்மை. இந்த நபர், சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே எங்கள் வாழ்கையில் வந்துவிட்டார். இதை ஒரு வெற்று குற்றச்சாட்டாக அல்ல மாறாக போதுமான ஆதாரங்களுடன் தான் கூறுகின்றேன்.
இன்னும் சொல்வதென்றால் வாழ்வின் கடினமான சமயங்களில் கூட நாங்கள் குடும்பத்துடன் ஒற்றுமையாக, என் கணவரின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் உடன் அன்புடனே இருந்தோம். எங்கள் சமூக ஊடக பதிவுகளே அதற்குச் சாட்சி. நாங்கள் பிரிவதற்கு முதல் நாள் வரை எங்கள் உறவும் எல்லோருடைய திருமண வாழ்விலும் இருப்பது போல அன்பும், விவாதமும், ஆசையும், தற்காலிக கருத்து வேறுபாடுகளும் நிறைந்தது என்று தான் நான் நம்ப வைக்கப்பட்டேன். தனது சொத்துகளை,கௌரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறிப் போகவில்லை. நன்றாக முன் கூட்டியே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து, தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரில் தான் வீட்டை விட்டுச் சென்றார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் அமைதியாகவும், மிகுந்த நிதானத்தோடும் திட்டமிட்டு தான் வீட்டை விட்டு வெளியேறினார்.
உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிச் செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி ’தொலைத்த பெற்றோர்கள்’ என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு, எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்? திட்டமிட்டு நடந்த இந்த சதியை தற்காப்பு நடவடிக்கையாக யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம். துன்புறுத்தப்பட்டதாக, தனிமைப்படுத்தப்பட்டதாகப் புகார் கூறுகிறார். அப்படியானால், ஏன் இத்தனை ஆண்டுகள் வரை காத்திருந்தார்? ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளைக் கொண்டாடினார்? ஏன் குடும்ப விழாக்களில் கலந்துகொண்டார்? வாழக்கூடாத சூழ்நிலையில் எதற்காக இத்தனை வருடங்கள் வாழ்ந்தார்?அவருக்கு உரிமையுள்ள அனைத்தையும் நன்றாக அனுபவித்துவிட்டு தனது குட்டு வெளிப்பட்டு தன் மீது குற்றம் சுமத்தப்படும் என்ற நிலையில் தான் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதன் காரணம் பயம் அல்ல அதற்கு மேல் அவருடைய ரகசிய வாழ்வைக் காப்பாற்ற முடியாமல் போனதே.
வீட்டோடு மாப்பிளையாக இருந்தேன் என்ற அவரின் குற்றச்சாட்டும் பொய்யானது. கடந்த ஒரு வருட காலத்தில் நான்கு முறை மட்டும் தான் அவர் தன் பிள்ளைகளைச் சந்தித்திருக்கிறார். அதுவும் அவருடைய விருப்பத்தின் பேரில் மட்டுமே! எங்கள் பிள்ளைகள் இன்று படும் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது’அவர்களது தொலைபேசிகள் எப்போதும் உபயோகத்தில் இருந்தும் அவர்களின் அப்பா அழைக்காத காரணம் அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. உண்மையில் பிள்ளைகளின் உறவு வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், எந்த சக்தியும் அவரைத் தடுத்திருக்க முடியாது. குழந்தைகளை அவரிடம் இருந்து அப்புறப்படுத்தியுள்ளேன் என உருகும் அவர், அவர்களை சந்திக்கவோ அல்லது அவர்களை தன் பொறுப்பில் ஒப்படைக்கும் படியோ சட்டப்பூர்வமாக எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை.
அனைத்து வடிவத்திலும் என்னால் துன்புறுத்தப் பட்டதாக சொல்கிறார்! மனம் வலிக்கிறது. திரையில் யாருக்கும் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை, நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறுவதைக் கேட்கும் போது வேதனையில் சிரிப்புதான் வருகிறது. அப்படியே அவர் என் கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும், அது அவரது விருப்பத்தினால் தான் இருந்திருக்க முடியுமே தவிர, கட்டாயத்தினால் அல்ல.
மேலும் இத்தனை நெருக்கடியையும் தாங்கிக் கொண்டிருக்கும் என் இரண்டு பிள்ளைகள், எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மற்றும் என் நண்பர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய இந்த தனிப்பட்ட வேதனையை, பிரச்சனையை இப்படி நான் பொதுவெளியில் இந்த உலகிற்கு எடுத்துக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும். இந்தச் சூழ்நிலையில் என் சுயகௌரவத்தை பாதுகாக்கவே இப்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நான் இன்னும் நீதிமன்றத்தின் சட்டத்தை நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கக் காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
View this post on InstagramA post shared by Aarti Ravi (@aarti.ravi)
<!–
–>
<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
–>