வணிகம்
கோடிக்கணக்கில் நஷ்டம்… 15 வகை மாம்பழங்களுக்கு அமெரிக்கா போட்ட தடை; கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்!

கோடிக்கணக்கில் நஷ்டம்… 15 வகை மாம்பழங்களுக்கு அமெரிக்கா போட்ட தடை; கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்!
லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ மற்றும் அட்லாண்டா உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க விமான நிலையங்களில், இந்தியாவில் இருந்து வந்த குறைந்தது 15 வகை மாம்பழ ஏற்றுமதிகளை அமெரிக்க அதிகாரிகள் ஆவணங்களில் உள்ள குறைபாடுகளால் நிராகரித்துள்ளனர்.ஏற்றுமதியாளர்களுக்கு மாம்பழங்களை அமெரிக்காவிலேயே அழிப்பது அல்லது இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவது என இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன. மாம்பழங்கள் விரைவில் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை என்பதாலும், திருப்பி அனுப்புவதற்கான செலவுகள் அதிகமாக இருப்பதாலும், அனைத்து ஏற்றுமதியாளர்களும் மாம்பழங்களை அங்கேயே அப்புறப்படுத்த முடிவு செய்தனர்.மாம்பழ ஏற்றுமதிக்கு அமெரிக்கா இந்தியாவின் முதன்மை இலக்காக உள்ளது. இதனால், இந்த சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மாம்பழங்கள் அழுகக்கூடியவை என்பதாலும், அழிப்பதற்கோ அல்லது மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கோ செலவுகள் இருப்பதாலும், வர்த்தகர்களுக்கு சுமார் 500,000 டாலர் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாம்பழங்கள் மே 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மும்பையில் கதிர்வீச்சு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இருப்பினும், இந்த கட்டாய நடைமுறைக்கு (பூச்சிகளை நீக்கவும், ஆயுளை நீட்டிக்கவும் பழத்தை கட்டுப்படுத்தப்பட்ட கதிர்வீச்சுக்கு உட்படுத்துதல்) தொடர்பான ஆவணங்களில் அமெரிக்க அதிகாரிகள் குறைகளை கண்டறிந்ததாக தெரிகிறது. பூச்சி கட்டுப்பாடு ஆவணங்களில் உள்ள நிர்வாகப் பிழைகளால்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.பாதிக்கப்பட்ட ஒரு ஏற்றுமதியாளருக்கு USDA (அமெரிக்க வேளாண் துறை) அனுப்பிய தகவலில், அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு “தவறாக வழங்கப்பட்ட PPQ203 காரணமாக” நுழைவை மறுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “இதனை மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும்” என்றும், இந்த ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கான செலவுகளை அமெரிக்க அரசு ஏற்காது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.கதிர்வீச்சு செயல்முறை மும்பையில் நடைபெறுகிறது. இது அமெரிக்க வேளாண் துறை (USDA) பிரதிநிதியால் மேற்பார்வையிடப்படுகிறது. அமெரிக்காவிற்கு மாம்பழ ஏற்றுமதிக்கு அத்தியாவசியமான PPQ203 படிவத்தை சரிபார்க்கும் பொறுப்பு இந்த அதிகாரிக்கு உள்ளது.இந்நிலையில், கதிர்வீச்சு செயல்முறை நிறைவடைந்துவிட்டதாகவும், அதன் பிறகு PPQ203 படிவம் வழங்கப்பட்டதாகவும் ஏற்றுமதியாளர் கூறிகிறார். “நடைமுறை நிறைவடையாமல் படிவத்தை எப்படிப் பெற முடியும்? மேலும், USDA அதிகாரியால் வழங்கப்பட்ட அந்த படிவம் இல்லாமல், மும்பை விமான நிலையத்தில் மாம்பழங்கள் ஏற்றப்படுவதற்கு அனுமதி கூட கிடைத்திருக்காது” என்று அவர் கூறினார்.இதனிடையே, இந்தியாவும் அமெரிக்காவும் விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய எதிர்பார்க்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அநேகமாக வரிகள் இல்லாத ஒரு ஒப்பந்தத்தை இந்தியா வழங்கியுள்ளது” என்று கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் வரும் மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா, அதிக தொழிலாளர்களைக் கொண்ட துறைகளுக்கு அமெரிக்காவிடம் இருந்து வரி குறைப்புகளைப் பெறுவதன் மூலம் இருவழி வர்த்தகத்தை மேம்படுத்த நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், தோல் பொருட்கள், ஆடைகள், பிளாஸ்டிக், ரசாயனங்கள், இறால், எண்ணெய் விதைகள், ரசாயனங்கள், திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் ஆகியவை இதில் அடங்கும்.இதற்கு ஈடாக, தொழில்துறை பொருட்கள், ஆட்டோமொபைல்கள் (குறிப்பாக மின்சார வாகனங்கள்), ஒயின்கள், பெட்ரோ கெமிக்கல் பொருட்கள், பால் பொருட்கள், ஆப்பிள் போன்ற விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறைக்கப்பட்ட வரிகளை அமெரிக்கா எதிர்பார்க்கிறது.ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, டிரம்ப்பின் பரஸ்பர வரிகள் ஜூலை மாதத்தில் நடைமுறைக்கு வரும் முன்னதாக, அமெரிக்காவுடன் மூன்று கட்ட வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா எதிர்நோக்கி உள்ளது.