வணிகம்
துபாய் வழியாக தங்கம் இறக்குமதி… அதிரடி கட்டுப்பாடுகளை விதிக்கும் மத்திய அரசு; யார் யாருக்கு பொருந்தும்?

துபாய் வழியாக தங்கம் இறக்குமதி… அதிரடி கட்டுப்பாடுகளை விதிக்கும் மத்திய அரசு; யார் யாருக்கு பொருந்தும்?
இந்திய அரசு, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி விதிகளை கடுமையாக்கியுள்ளது. இனி அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தகுதிவாய்ந்த நகைக்கடைக்காரர்கள் மற்றும் இந்திய – ஐக்கிய அரபு அமீரக விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ் செல்லுபடியாகும் TRQ (Tariff Rate Quota) வைத்திருப்பவர்கள் மட்டுமே தங்கம் மற்றும் வெள்ளியை இந்தியாவுக்குள் கொண்டு வர முடியும் என எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பதப்படுத்தப்படாத, அரை – தயாரிக்கப்பட்ட மற்றும் தூள் வடிவ தங்கம் மற்றும் வெள்ளிக்கு பொருந்தும்.சில இறக்குமதியாளர்கள் சுங்க வகைப்பாடுகளில் உள்ள தெளிவின்மையைப் பயன்படுத்தி, துபாயில் இருந்து ஏறத்தாழ தூய தங்கத்தை பிளாட்டினம் கலவை எனக் கூறி கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்கத்தை பிளாட்டினம் எனத் தவறாக அறிவிப்பதன் மூலம், CEPA இன் கீழ் வழங்கப்படும் குறைந்த இறக்குமதி வரிகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.இதனைத் தடுக்கும் வகையில், அரசு 99 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட தூய்மையுள்ள பிளாட்டினத்திற்கான ஒரு குறிப்பிட்ட ஹார்மோனைஸ் செய்யப்பட்ட சிஸ்டம் (HS) குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய இறக்குமதிகள் மட்டுமே இனி CEPA இன் கீழ் வரிச் சலுகைகளுக்குத் தகுதி பெறும். மற்ற பிளாட்டினம் அடிப்படையிலான கலவைகள் அல்லது சேர்க்கைகள் இனி தகுதி பெறாது.”தங்க இறக்குமதி, பிளாட்டினம் என்ற பெயரில் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, தனி HS குறியீடுகளை உருவாக்க பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு பிரத்யேக HS குறியீடுகளை உருவாக்க முன்மொழியப்பட்டது. இதன் நோக்கம், இறக்குமதிகளை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதும், கண்காணிப்பதும் மற்றும் வரி கட்டமைப்புகளை சீரமைப்பதுமாகும்.CEPA இன் கீழ், இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஆண்டுக்கு 200 மெட்ரிக் டன் தங்கம் வரை குறைந்த வரியில் இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது – TRQ வழிமுறையின் மூலம் 1% சலுகை கிடைக்கிறது.பிப்ரவரி மாதம், ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (GJEPC) வர்த்தக அமைச்சகத்திடம், இந்தியாவின் வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய சுவிட்சர்லாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு தங்க இறக்குமதியை ஓரளவு மாற்றியமைக்குமாறு வலியுறுத்தியது. தற்போது, சுவிட்சர்லாந்து இந்தியாவின் தங்க கட்டிகள் தேவையில் 35 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. இதேபோல், இங்கிலாந்தில் இருந்து (41.54%) அமெரிக்காவிற்கு வெள்ளி கட்டி இறக்குமதியை மாற்றியமைக்க கவுன்சில் முன்மொழிந்தது.2024 ஆம் ஆண்டில், இந்தியா அமெரிக்காவிற்கு 11.58 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரத்தினங்கள் மற்றும் நகைகளை ஏற்றுமதி செய்தது. அதே நேரத்தில் 5.31 பில்லியன் டாலர் இறக்குமதி செய்தது. இதன் மூலம் 6.27 பில்லியன் டாலர் உபரி ஏற்பட்டது. இந்த பிரிவில் இந்தியாவின் ஏற்றுமதியில் அமெரிக்கா 20.28 சதவீதம் ஆகவும், ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 12.99 சதவீதம் ஆகவும் இருந்தது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ள நிலையில், சாத்தியமான வரி அழுத்தங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் GJEPC இன் இந்த முன்மொழிவு வந்துள்ளது. அமெரிக்க பதிலடியை ஈடுசெய்ய உள்நாட்டு இறக்குமதி வரிகளைக் குறைக்க கவுன்சில் முன்மொழிந்துள்ளது.