உலகம்
பாகிஸ்தானில் இன்று பாடசாலை பேருந்து மீது குண்டுத் தாக்குதல்!

பாகிஸ்தானில் இன்று பாடசாலை பேருந்து மீது குண்டுத் தாக்குதல்!
தென்மேற்கு பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை (21) பாடசாலை பேருந்து மீது தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு மாணவர்கள் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இதுவாகும். குறித்த மாகாணம் நீண்டகால கிளர்ச்சியின் களமாக இருந்து வருகிறது.
2019ஆம் ஆண்டில் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சட்டவிரோத பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் உட்பட, பிரிவினைவாத குழுக்கள் தொடர்ச்சியாக இங்கு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
குஜ்தார் மாவட்டத்தில் இராணுவத்தால் நடத்தப்படும் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் பதில் ஆணையர் யாசிர் இக்பால் தெரிவித்தார். தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் பலூச் இன பிரிவினைவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்து, மாணவர்கள் இறந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களல் பல மாணவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதனால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.