பொழுதுபோக்கு
மாதம் ரூ40 லட்சம் ஜீவனாம்சம்; ரவி மோகனுக்கு செக் வைத்த ஆர்த்தி: நீதிமன்றம் புதிய உத்தரவு

மாதம் ரூ40 லட்சம் ஜீவனாம்சம்; ரவி மோகனுக்கு செக் வைத்த ஆர்த்தி: நீதிமன்றம் புதிய உத்தரவு
தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அறிவித்திருந்த நிலையில், இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஆர்த்தி தனக்கு ஜீவனாம்சம் கேட்டுள்ளது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஆர்த்தி இந்த விவாகரத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், தான் ரவியுடன் இணைந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேசன் இல்ல திருமண விழாவில், நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் பங்கேற்றிருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஆர்த்தி, தனது குழந்தைகளுக்கு நியாயம் வேண்டும் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கததில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.இதனிடையே ரவி மோகன் – ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் ரவி மோகனிடம் இருந்து தனக்கு மாதம் ரூ40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என்று ஆர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து உடனடியாக பதில் அளிக்க நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்ட சென்னை குடும்ப நல நீதிமன்றம், வழக்கை ஜூன் 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.