இலங்கை
வெளிநாட்டுத் தூதுவர்களுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு!

வெளிநாட்டுத் தூதுவர்களுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு!
தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இடையே நேற்று சந்திப்புக்கள் நடந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், சுவிட்ஸர்லாந்து தூதுவர், அமெரிக்கத் தூதுவர் ஆகியோரை தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது, காணிச் சுவீகரிப்புத்தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம், குருந்தூர்மலை விவகாரம், பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் தூதுவர்களிடம் பேரவையினரால் சுட்டிக்காட்டப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ந.காண்டீபன் ஆகியோர் இந்தச் சந்திப்புகளில் கலந்துகொண்டிருந்தனர்.