நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 22/05/2025 | Edited on 22/05/2025

பாலிவுட் நடிகர் சல்மான் தற்போது ஒய் ப்ளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கிறார். காரணம் அவருக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வருவதால். 1998ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ஒரு படப்பிடிப்பின் போது பிஷ்னோய் சமூகம் தெயவங்களாக பார்க்கப்படும் மான் ஒன்றை அவர் வேட்டையாடிய விவகாரத்தில் அச்சமூகத்தைச் சேர்ந்த பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய், சல்மான் கானை கொலை செய்யவுள்ளதாக கூறி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். 

கடந்த ஆண்டு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த இரண்டு நபர்கள் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தினர். இது பரபரப்புக்குள்ளானது. பின்பு சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் லாரன்ஸ், பிஷ்னோய் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனால் சல்மான் கான் எப்போதும் போஸ் பாதுகாப்புடனே இருந்து வருகிறார். இருப்பினும் அவருக்கு கொலை மிரட்டல் வருவது நின்ற பாடில்லை. அடிக்கடி குறுஞ்செய்தி மூலமாகவும் வாட் அப் மூலமாகவும் கொலை மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. 

Advertisement

இந்த நிலையில் மும்பையில், கேலக்ஸி அப்பார்ட்மெண்டில் இருக்கும் சல்மான் கான் வீட்டில் அத்துமீறி நுழைய முயன்றதாக இரண்டு நபர்களை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். முதலில் 23 வயதுள்ள ஜிதேந்திர குமார் சிங் என்பவரை கைது செய்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலின் படி, சத்தீஸ்கரைச் சேர்ந்த  ஜிதேந்திர குமார் சிங் கடந்த 20ஆம் தேதி காலை சல்மான் கான் வீட்டின் முன்பு நுழைய முயன்றுள்ளார். ஆனால் அவரை அங்கிருந்த பாதுகாப்பு போலீஸ் அதிகாரி தடுத்து நிறுத்தி வெளியே போகச் சொல்லியுள்ளார். உடனே அந்த நபர் தனது போனை கீழே போட்டு உடைத்து ஒரு சீன் கிரியேட் செய்துள்ளார். பின்பு மாலை மீண்டும் வீட்டினுள் நுழைய முயன்ற போது அவரை பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகள் கைது செய்து அப்பகுதி காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இரண்டாவது நபராக கைது செய்யப்பட்டவர் 36வயதுள்ள இஷா சாப்ரா என்ற பெண். மும்பை பகுதியை சேர்ந்த இவர் கடந்த 21ஆம் தேதி சல்மான் கான் வீட்டினுள் நுழைய முயன்றுள்ளார். அதனால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணையில் உள்ளார். கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களிடத்திலும் மும்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கைதான முதல் நபர் சல்மான் கானை சந்திக்க முயன்றதாக கூறியுள்ளார்.