இந்தியா
‘எனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை; சிந்தூர்தான் ஓடுகிறது’: ராஜஸ்தானில் மோடி பேச்சு

‘எனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை; சிந்தூர்தான் ஓடுகிறது’: ராஜஸ்தானில் மோடி பேச்சு
இன்று (மே 22) ராஜஸ்தானின் பிகானேரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு வலுவான செய்தியை வெளியிட்டார். தீவிரவாத உள்கட்டமைப்புகள் மீதான சமீபத்திய இந்தியத் தாக்குதல்கள் மூன்று முக்கிய உண்மைகளை உலகிற்குத் தெளிவாக உணர்த்தியுள்ளன என்று அவர் வலியுறுத்தினார். பிரதமர் மோடி தனது உரையில், “இந்திய முப்படைகளும் இணைந்து நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தன. சிந்தூர் (குங்குமம்) வெடிமருந்தாக மாறும் போது என்ன நடக்கும் என்பதை உலகமும், நாட்டின் எதிரிகளும் இப்போது நேரடியாகப் பார்த்துள்ளனர்,” என்று குறிப்பிட்டார். மேலும், “இப்போது என் நரம்புகளில் சூடான சிந்தூர் ஓடுகிறது,” என்று தெரிவித்தார்.மேலும், “புதிய நீதியின் வடிவம்” என்று இந்தியாவின் செயல்பாடுகளை அவர் குறிப்பிட்டார். இனி பாகிஸ்தானுடன் எந்த வர்த்தகமும் அல்லது பேச்சுவார்த்தையும் இருக்காது என்று திட்டவட்டமாக அறிவித்தார். சமீபத்திய நிகழ்வுகள் மூன்று விஷயங்களைத் தெளிவுபடுத்துகின்றன என்றும் பிரதமர் எடுத்துரைத்தார். அதன்படி, “இந்தியாவின் மீது நடைபெறும் எந்தவொரு தீவிரவாதத் தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும். அணு ஆயுதப் பயன்பாடு குறித்த மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது. பாகிஸ்தானின் “அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள்” அனைத்தும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்படும்” என்று அவர் கூறினார்.சமீபத்தில் பாகிஸ்தானால் தாக்கப்பட்ட பிகானேர் பகுதிகளிலேயே பிரதமர் மோடி தனது உரையை நிகழ்த்தியுள்ளார். “ராஜஸ்தானின் இந்த துணிச்சல் மிக்க பூமி, நாட்டையும் அதன் மக்களையும் விட பெரியது எதுவும் இல்லை என்று நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. ஏப்ரல் 22 அன்று, தீவிரவாதிகள் (பஹல்காம் பாதிக்கப்பட்டவர்களின்) மதத்தைக் கேட்டு, நமது சகோதரிகளின் சிந்தூரை அழித்தனர். அந்த குண்டுகள் பஹல்காமில் சுடப்பட்டிருந்தாலும், அவை நாட்டின் 140 கோடி மக்களின் இதயத்தில் துளைத்தன. அதன்பிறகு, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒன்றுபட்டு, தீவிரவாதிகளை அழித்து, கற்பனை செய்ய முடியாத தண்டனை வழங்குவோம் என்று சபதம் எடுத்தனர்” என பிரதமர் கூறினார்.”இன்று, உங்கள் ஆசீர்வாதத்துடனும், நாட்டின் ஆயுதப் படைகளின் வீரத்துடனும், நாங்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். எங்கள் அரசு, முப்படைகளுக்கும் சுதந்திரம் அளித்தது. மூன்று படைகளும் இணைந்து பாகிஸ்தானை மண்டியிட வைக்கும் ஒரு சக்ரவியூகத்தை உருவாக்கின” என்று பிரதமர் தெரிவித்தார்.”நண்பர்களே, ஏப்ரல் 22 அன்று நடந்த தாக்குதலுக்குப் பதிலடியாக, நாங்கள் 22 நிமிடங்களில் பயங்கரவாதிகளின் 9 பெரிய மறைவிடங்களை அழித்தோம். சிந்தூர் வெடிமருந்தாக மாறும் போது என்ன நடக்கும் என்பதை உலகமும், நாட்டின் எதிரிகளும் கண்டனர்” என்று பிரதமர் கூறினார்.”பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவுடன் நேரடிப் போரில் வெற்றி பெற முடியாது. நேரடிப் போர் எப்போது நடந்தாலும், பாகிஸ்தான் அவமானகரமான தோல்வியை சந்திக்க நேரிடும். அதனால்தான் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தனது போர்க்கருவியாக மாற்றியுள்ளது. சுதந்திரம் பெற்றதிலிருந்து பல தசாப்தங்களாக இது நடந்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.”பாகிஸ்தான் பயங்கரவாதத்தைப் பரப்பியது, அப்பாவி மக்களைக் கொன்றது, இந்தியாவில் அச்சமான சூழலை உருவாக்கியது. ஆனால் பாகிஸ்தான் ஒரு விஷயத்தை மறந்துவிட்டது. இப்போது, தாய் பாரதத்தின் சேவகன் மோடி இங்கு தலைநிமிர்ந்து நிற்கிறேன். மோடியின் மனம் குளிர்ந்தது. ஆனால் மோடியின் ரத்தம் சூடானது. இப்போது, மோடியின் நரம்புகளில், ரத்தத்திற்கு பதிலாக சூடான சிந்தூர் ஓடுகிறது,” என்று பிரதமர் உணர்ச்சிபொங்கக் கூறினார்.2019 பாலக்கோட் வான்வழித் தாக்குதல்களை நினைவு கூர்ந்த மோடி, “முதலில் அவர்களது இருப்பிடத்தில் புகுந்து தாக்கினோம். இப்போது நேரடியாக மார்பில் தாக்கியுள்ளோம். பயங்கரவாதத்தை நசுக்கும் வழியும், கொள்கையும் இதுதான். இதுதான் பாரதம், இது புதிய பாரதம்” என்று தெரிவித்தார்.ஆபரேஷன் சிந்தூர் தீவிரவாதத்தை எதிர்கொள்ள மூன்று முக்கிய கொள்கைகளை நிலைநாட்டியுள்ளதாக பிரதமர் கூறினார். அந்த வகையில், “பாரதத்தின் மீது ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தால், தக்க பதிலடி கிடைக்கும். அதற்கான நேரத்தையும், முறையையும் இந்திய ஆயுதப் படைகளே தீர்மானிக்கும். நிபந்தனைகளும் எங்களுடையதாகவே இருக்கும். அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு பாரதம் அஞ்சப் போவதில்லை.பயங்கரவாதத்தின் தலைவர்களையும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அரசையும் இந்தியா வேறுபடுத்திப் பார்க்காது. அவை ஒன்றாய் கருதப்படும்” எனக் கூறினார்.பாகிஸ்தானுடன் எந்த வர்த்தகமோ அல்லது பேச்சுவார்த்தையோ இருக்காது என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். “பேச்சுவார்த்தை என்றால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்தால், அது ஒவ்வொரு பைசாவையும் இழக்கும். இந்தியாவின் உரிமையான தண்ணீரை பாகிஸ்தான் பெறாது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவது பாகிஸ்தானுக்கு பெரும் விலை கொடுக்கும். இது பாரதத்தின் உறுதிப்பாடு, இந்த உறுதிப்பாட்டிலிருந்து எந்த சக்தியாலும் நம்மை விலக்க முடியாது” என்று அவர் கூறினார். மேலும், ஒரு வளர்ந்த பாரதத்திற்கு பாதுகாப்பு மற்றும் செழிப்பு இரண்டும் அவசியம் என்றும், “பாரதத்தின் ஒவ்வொரு மூலையும் வலுவாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்” என்றும் தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாலக்கோட்டில் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியபோது, தனது முதல் பொதுக்கூட்டம் ராஜஸ்தானில் நடந்ததும் ஒரு தற்செயல் நிகழ்வு என்று பிரதமர் நினைவு கூர்ந்தார். 2019 பிப்ரவரியில் சுருவில் அவர் பேசிய “இந்த மண்ணின் மீது சத்தியமாக, நான் தேசத்தை அழிய விடமாட்டேன், நான் தேசத்தை தலைகுனிய விடமாட்டேன்” என்ற வார்த்தைகளையும் மீண்டும் நினைவுபடுத்தினார்.அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஏழு இந்தியக் குழு உலகெங்கிலும் சென்று “பாகிஸ்தானின் உண்மையான முகத்தை உலகிற்கு வெளிப்படுத்த” இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.