இலங்கை
சூரிய குடும்பத்திலிருந்து தூக்கி எறியப்படுமா பூமி?; ஆய்வில் வெளிவந்த பகீர் தகவல்

சூரிய குடும்பத்திலிருந்து தூக்கி எறியப்படுமா பூமி?; ஆய்வில் வெளிவந்த பகீர் தகவல்
பூமி குறித்தும் சூரியக் குடும்பம் குறித்தும் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள். அதன்படி சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சில பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அதாவது வரும் காலத்தில் பூமி சூரியனுடன் மோத அல்லது சூரியக் குடும்பத்தில் இருந்தே தூக்கிவீசப்படும் ஆபத்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் இந்த புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
ஏற்கனவே சூரியன் 50 கோடி ஆண்டுகளில் அழியலாம் என்றும் அப்போது அது பூமியையும் அழித்துவிடும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அது நடப்பதற்கு இப்படிப் பூமி தூக்கியடிக்கப்படும் சம்பவம் நடக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நமது சோலார் சிஸ்டம் அருகே கடந்து போகும் ஆகும் நட்சத்திரங்களால் பூமியின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து பல ஆயிரம் கம்ப்யூட்டர் மொடல்களை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் ஐகாரஸ் (Icarus) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் நட்சத்திரம் (Passing star) முன்பு மதிப்பிட்டதை விட அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நட்சத்திரம் சுமாராகச் சூரியனின் நிறை அளவுக்கு இருந்தால்.
அது ப்ளூட்டோவுக்கு வெளியே இருக்கும் நமது சூரிய மண்டலத்தின் எல்லையாகக் கருதப்படும் ஊர்ட் கிளைவுட்டை (Oort Cloud) கூட கணிசமாகச் சீர்குலைக்கக்கூடும் என்றும் இந்த ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில் மேலும், “அடுத்த நான்கு பில்லியன் ஆண்டுகளில், பூமியை கடக்கும் நட்சத்திரங்கள் தான் சுற்றுப்பாதை மாறுவதற்கான முக்கிய காரணமாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் புளூட்டோ ஆகியவை முன்பு நினைத்ததை விட மிகவும் நிலையற்றவை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானியலாளர்கள் நாதன் கைப் மற்றும் சீன் ரேமண்ட் ஆகியோர் கூறுகையில், “நமது சூரிய மண்டலத்தில் சில சிக்கல்கள் உள்ளன. பெரிய கிரகங்களின் சுற்றுப்பாதைகள் சில காரணங்களால் மாறலாம்.
கூடுதலாக, நமது கிரகங்கள் மற்றும் புளூட்டோ முன்பு நினைத்ததை விட மிகவும் நிலையற்றவையாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையால், புதன் கிரகம் தனது பாதையில் இருந்து விலகிச் செல்ல 50-80 சதவீதம் வரை வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல ஐந்து பில்லியன் ஆண்டுகளில் புளூட்டோவும் இதுபோல விலகிச் செல்ல 5 சதவீதம் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில்,
“அதேபோல செவ்வாய்க் கிரகம் வேறு கிரகத்தில் மோத அல்லது சூரியக் குடும்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட 0.3% வாய்ப்பு இருக்கிறது. அதுபோல பூமி சூரியக் குடும்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட அல்லது வேறு கிரகத்தில் மோத 0.2 சதவீதம் வாய்ப்புள்ளது” என்றனர்.
ஒருவேளை பூமியை கடக்கும் நட்சத்திரத்தால் புதன் கிரகத்தின் சுற்றுப்பாதை மாறினால், வீனஸ் அல்லது செவ்வாய் கிரகங்கள் பூமியுடன் மோதக்கூடும். வேறு சில சமயங்களில், பூமி சூரியனுடன் கூட மோதலாம்.
அல்லது வீனஸ் மற்றும் செவ்வாய் கிரகங்கள் பூமியை வியாழன் கிரகத்தை நோக்கித் தள்ளக்கூடும். அதன் பிறகு, வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியைச் சூரிய மண்டலத்திலிருந்து வெளியேற்றும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.