இலங்கை
வடக்கில் படை முகாம்களை அகற்றுவது ஆபத்தானதாம்; சரத் பொன்சேகா கூறுகின்றார்

வடக்கில் படை முகாம்களை அகற்றுவது ஆபத்தானதாம்; சரத் பொன்சேகா கூறுகின்றார்
சிங்கப்பூர் மற்றும் சுவிட்ஸர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. அதனால் வடக்கில் படைமுகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின் போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
வடக்கு, கிழக்கில் புலிகளின் மனோ நிலையில் வாழும் சிலரும் இருக்கவே செய்கின்றனர். புலிகளின் நிகழ்ச்சி நிரல் தொடர்பாகக் கனவு காணும் தரப்பினரும் உள்ளனர். அனைத்து மக்களும் அல்லர். 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையானோர் அவ்வாறு இருக்கலாம். அதேபோல புலிகளை ஆசீர்வதித்த அரசியல்வாதிகள் உள்ளனர். புலிகளை மீள் எழுச்சிபெற வைப்பதற்கு முற்படும் டயஸ்போராக் குழுவொன்றும் உள்ளது. இப்படியான அச்சுறுத்தல் இருப்பதால், போர் மூண்ட பிறகு முகாம்கள் அமைப்பது பற்றிச் சிந்திக்காமல். தூரநோக்குச் சிந்தனை அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவகையில் முகாம்கள் இருக்கவேண்டும். அதற்காகப் போர்க்காலத்தில் இருந்தது போல் அல்ல. பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் நகர்வுகள் இடம்பெறவேண்டும். யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பைப் பலவீனப்படுத்தினால் அங்குள்ள மக்களுக்குத்தான் சரி இல்லை. ஆவா என்ற பாதாளக்குழுவொன்று இருந்தது. கேரள கஞ்சா வருகின்றது. வீதித் தடைகளை நீக்கினால் தெற்கிலுள்ள பாதாளக்குழுக்கள் வடக்குக்குச் சென்று ஒளியக்கூடும். எனவே, பாதுகாப்பு நெறிமுறைகள் அவசியம்- என்றார்.