இலங்கை
ஆபத்தான மின்விளக்கு கம்பம்; நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

ஆபத்தான மின்விளக்கு கம்பம்; நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடிய வகையில் அமைந்துள்ள வீதி மின்விளக்கு கம்பம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க மின்சார சபையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொக்குவில் மஞ்சவனபதி முருகன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள வீதி மின் விளக்கு கம்பத்தின் மிக அருகே உயர் மின்அழுத்த மின்வடம் செல்கின்றது. இந்த மின்வடம், பலமான காற்று காரணமாக தொய்வு நிலையில் காணப்படுவதால், அது குறித்த மின்விளக்கு கம்பத்திற்கு மிக நெருக்கமாக செல்கிறது.
இந்த நிலைமை உயிருக்கு ஆபத்தானதாக உள்ளதுடன், ஏதேனும் நேரில் தொடுதலாகும் சூழ்நிலை உருவானால், மின்சாரம் தாக்கும் அபாயம் அதிகரிக்கலாம் என அப்பகுதியிலுள்ள கடை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மின்விளக்கு கம்பத்தில் பழுதடைந்த மின் விளக்கை திருத்த முற்பட்ட நல்லூர் பிரதேசசபையின் ஊழியர், உயர் மின்அழுத்த மின் வடத்தில் இருந்து ஏற்பட்ட மின்சாரம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பாதுகாப்பு உடைகள் அணிந்து பணியாற்றியதாலேயே, அவர் உயிரிழப்பதிலிருந்து தப்பியுள்ளார். தற்பொழுது அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை, சில மாதங்களுக்கு முன்னர் தட்டாதெரு சந்திக்கு அருகில் உள்ள வீதி மின் விளக்கு கம்பத்தில் படர்ந்திருந்த தாவர கொடியை மாடொன்று உணவாக எடுத்துக் கொள்ள முயன்ற போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
எனவே, இவ்வாறு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மின் விளக்கு கம்பம் தொடர்பில் மின்சார சபையினர் உடனடியாக கவனம் செலுத்தி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.