இலங்கை
இலங்கைக்கான 5வது கடன் தவணை ; IMF எடுத்துள்ள தீர்மானம்

இலங்கைக்கான 5வது கடன் தவணை ; IMF எடுத்துள்ள தீர்மானம்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் (Extended Fund Facility) 5வது தவணையாக 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், இலங்கைக்கு IMF இதுவரை வழங்கிய மொத்த கடன் தொகை சுமார் 1.75 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்கிறது.
இன்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கைக்கான IMF தூதரகத் தலைவர் இவான் பாபகியோகியோ இதனை அறிவித்தார்.
அவர் கூறியதாவது,
“நான்காவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும்.
இந்தத் தொகை, இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிக்கப் பயன்படுத்தப்படும்.
இது இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இலங்கையின் செயல்திறன் இந்த மதிப்பாய்வில் பொதுவாக வலுவாக உள்ளது.”
மேலும், இலங்கை அதிகாரிகள் இரு முக்கிய நடவடிக்கைகளை நிறைவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்,
2025 வரையிலான செலவு-மீட்பு அடிப்படையிலான மின்சார விலை நிர்ணயம்.
தானியங்கி மின்சார விலை நிர்ணய பொறிமுறையை செயல்படுத்துதல்.
இந்த நடவடிக்கைகள் இலக்குகளை அடைவதற்கான அபாயங்களைக் குறைப்பதற்கு உதவியுள்ளதாகவும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கு இந்தக் கடன் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.