இந்தியா
புதுச்சேரி த.வெ.க தொண்டர் தற்கொலை: குற்றம் சாட்டப்பட்டவரை 48 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்

புதுச்சேரி த.வெ.க தொண்டர் தற்கொலை: குற்றம் சாட்டப்பட்டவரை 48 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்
கந்துவட்டிக் கொடுமையால் புதுச்சேரி த.வெ.க தொண்டர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சம்பந்தப்பட்ட கந்துவட்டிக்காரர்களை 48 மணி நேரத்திற்குள் கைது செய்த உருளையன்பேட்டை காவல்துறையினருக்கு, புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.கடந்த 02.06.2025 அன்று இரவு, புதுச்சேரி, சாரம், கொசப்பாளையம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மேரி சோரிஸ் என்பவர் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது கணவர் விக்ரம், கடன் தொல்லை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்று புகார்தாரரிடம் விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த விக்ரம் பயன்படுத்திய தற்கொலைக் குறிப்பு, டைரி மற்றும் மொபைல் போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவற்றை ஆராய்ந்ததில், தற்கொலை செய்துகொண்ட விக்ரம், தனசேகர், செல்வராஜு மற்றும் செல்வராஜ் ஆகியோரிடமிருந்து வட்டிக்குக் கடன் வாங்கியிருப்பது தெரியவந்தது.கடன் வழங்கியவர்கள் தொடர்ந்து அதிக வட்டி விகிதங்களைக் கேட்டு நச்சரித்து, இழிவுபடுத்தியும், அவமானப்படுத்தியும் பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாக விக்ரம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று புகாரளிக்கப்பட்டது. இதன் அடுத்தகட்ட விசாரணையின் போது, ஆர். கலைவாணன், ஐ.பி.எஸ், எஸ்.எஸ்.பி (சட்டம் & ஒழுங்கு) மற்றும் கே.எல். வீரவல்லபன், பி.பி.எஸ் (எஸ்.பி – கிழக்கு) ஆகியோரின் உத்தரவின் பேரில், உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஆர். கார்த்திகேயன் தலைமையிலான குற்றப்பிரிவு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, வழக்கு பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள், சம்பந்தப்பட்ட நபர்களான தனசேகர், செல்வராஜு மற்றும் செல்வராஜ் ஆகியோரைக் கைது செய்தது. இன்று (04.07.2025), செல்வராஜு மற்றும் செல்வராஜ் ஆகியோர் நீதிமன்றக் காவலில் காலாபட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தனசேகரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்ததும் அவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்.இந்த வழக்கில் உருளையன்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எடுத்த முயற்சிகளை எஸ்.எஸ்.பி (சட்டம் & ஒழுங்கு) பாராட்டினார். மேலும், இது போன்று ஏற்படும் துன்புறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் பற்றிய தகவல்களை உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.செய்தி – பாபு ராஜேந்திரன்.