வணிகம்
மினிமம் பேலன்ஸ்? சூப்பர் சலுகை அறிவித்த இந்தியன் வங்கி; வாடிக்கையாளர்கள் குஷி

மினிமம் பேலன்ஸ்? சூப்பர் சலுகை அறிவித்த இந்தியன் வங்கி; வாடிக்கையாளர்கள் குஷி
இந்தியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 7, 2025 முதல் அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்கும் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள ஒரு நடவடிக்கையாகும்.இந்த அறிவிப்பு, சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் வங்கி சேவைகளை மேலும் அணுகக் கூடியதாகவும், எளிதாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. கனரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவையும் ஏற்கனவே குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்காததற்கான அபராதத்தை நீக்கியுள்ள நிலையில், இந்தியன் வங்கியின் இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்கதாகும்.மலிவு விலையில் கடன் வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியன் வங்கி தனது ஓராண்டு மார்க்கினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட் (எம்.சி.எல்.ஆர்) எனப்படும் கடன் வட்டி விகிதத்தில் 5 அடிப்படை புள்ளிகளை குறைத்து, அதை 9.00% ஆக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் ஜூலை 3, 2025 முதல் அமலுக்கு வந்தது. இந்த எம்.சி.எல்.ஆர் குறைப்பு, கடன் வாங்கியவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் நேரடியாக பலன் அளிக்கும்.முன்னதாக, பஞ்சாப் நேஷனல் வங்கி (பி.என்.பி) ஜூலை 1, 2025 முதல் அனைத்து சேமிப்புக் கணக்குகளிலும் குறைந்தபட்ச சராசரி இருப்பை (எம்.ஏ.பி) பராமரிக்காததற்கான அபராத கட்டணங்களை நீக்குவதாக அறிவித்தது. கனரா வங்கிக்கு அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்ட இரண்டாவது பொதுத்துறை வங்கி பி.என்.பி ஆகும்.கனரா வங்கி தனது சேமிப்புக் கணக்குதாரர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், அனைத்து வகையான சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கும் சராசரி மாத இருப்பு (ஏ.எம்.பி) தேவையை நீக்கியுள்ளது. இதன் மூலம், ஏ.எம்.பி தொடர்பான அபராதங்களை நீக்கிய முதல் பெரிய பொதுத்துறை வங்கி என்ற பெருமையை கனரா வங்கி பெற்றுள்ளது.எம்.ஏ.பி என்பது, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் (பொதுவாக மாதந்தோறும்) உங்கள் சேமிப்புக் கணக்கில் பராமரிக்கப்பட வேண்டிய சராசரி தொகையாகும். வங்கிகளின் இந்த நடவடிக்கைகள், வங்கித் துறையில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதுடன், அதிக மக்களை வங்கிச் சேவைகளை அணுகவும், நிதி ரீதியாக பயனடையவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.