பொழுதுபோக்கு
மிரட்டிட்டீங்க போங்க… ரஜினிகாந்த் சொன்ன அந்த வார்த்தை: மிஸஸ் அண்ட் மிஸ்டர் பற்றி மனம் திறந்த வனிதா

மிரட்டிட்டீங்க போங்க… ரஜினிகாந்த் சொன்ன அந்த வார்த்தை: மிஸஸ் அண்ட் மிஸ்டர் பற்றி மனம் திறந்த வனிதா
தமிழ் சினிமாவில் சிலர் குறித்து ஒரு பரபரப்பான பிம்பம் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் என்ன செய்தாலும் வைரலாகி வருவது மிகவும் இயல்பான ஒன்றாக மாறி இருக்கும். அந்த வரிசையில் நடிகை வனிதா விஜயகுமாருக்கு தனி இடம் இருக்கிறது.சமீப நாட்களாக தனது ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் வனிதா விஜயகுமார் தீவிரமாக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், அண்மையில் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து ப்ரொவோக் டிவி என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, “ரஜினிகாந்தை நேரில் சந்தித்தது சிறப்பான அனுபவம். எங்களை முதலில் பார்த்ததும் படத்திற்காக எவ்வளவு செலவு செய்தீர்கள் என்று கேட்டார். நாங்கள் செலவு செய்த தொகையை கேட்டதும் ரஜினிகாந்த் ஆச்சரியப்பட்டார்.மேலும், எங்களிடம் வேடிக்கையாகவும் ரஜினிகாந்த் பேசினார். எல்லோரையும் நான் மிரட்டி விட்டதாக விளையாட்டாக அவர் கூறினார். என்னை பார்த்தால் எல்லோரும் பயப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.கடைசியாக, கபாலி திரைப்படத்தின் வெளியீட்டின் போது ரஜினிகாந்துடன் நீண்ட நேரம் பேசினேன். அதன் பின்னர், இப்போது தான் அவரை சந்தித்து நெடுநேரம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. என்னை நினைத்து பெருமை கொள்வதாகவும் ரஜினிகாந்த் கூறினார்.தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நிறைய விஷயங்களை பேசினோம். என்னுடைய குழந்தைகள் குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார். எனது மகள் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் விவரங்களையும் கேட்டார்.ஒருவர் மீது அக்கறை வைத்துவிட்டால், அவர்கள் குறித்து உன்னிப்பாக கவனிக்கும் தன்மை ரஜினிகாந்திற்கு இருக்கிறது. குறிப்பாக, நமக்கே தெரியாமல் நம்மை கவனிப்பார். அவருடைய ஆசீர்வாதம் கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்” என்று வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.