பொழுதுபோக்கு
கதை சொன்னவுடன் பைக்; முழு படம் பார்த்தவுடன் கார் கொடுத்த நடிகர்: விபத்தில் சிக்கியது குறித்து எஸ்.ஜே. சூர்யா ஓபன் டாக்!

கதை சொன்னவுடன் பைக்; முழு படம் பார்த்தவுடன் கார் கொடுத்த நடிகர்: விபத்தில் சிக்கியது குறித்து எஸ்.ஜே. சூர்யா ஓபன் டாக்!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது ஒரு ட்ரெண்ட் நிலவி வருகிறது. அந்த வகையில், ஒரு திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி அடைந்தால், அப்படத்தின் இயக்குநர், நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து கார் பரிசாக வழங்கப்படுகிறது.மாமன்னன் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், மாரி செல்வராஜுக்கு உதயநிதி கார் பரிசளித்தது, ஜெயிலர் படத்திற்கு பின்னர், ரஜினிகாந்த், அனிருத்துக்கு கலாநிதி மாறன் கார் பரிசாக கொடுத்தது, விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷுக்கு கமல்ஹாசன் கார் கொடுத்தது என்று பலவற்றை இதற்கு உதாரணங்களாக கூறலாம்.ஆனால், ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ட்ரெண்டை நடிகர் அஜித்குமார் உருவாக்கி விட்டார். குறிப்பாக, படம் வெளியாகி வெற்றி பெறுவதற்கு முன்பாகவே தனது இயக்குநரின் திறமை, உழைப்புக்கு பரிசளிக்கும் விதமாக பைக் மற்றும் காரை அஜித்குமார் பரிசளித்துள்ளார். அந்த, திறமைசாலி இயக்குநர் வேறு யாருமில்லை; எஸ்.ஜே சூர்யா தான்.பிகைண்ட்வுட்ஸ் விருது வழங்கும் விழாவில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா கலந்து கொண்டார். அப்போது, இந்த சுவாரசிய தருணங்களை அவர் நினைவு கூர்ந்தார். அந்த வகையில், “வாலி திரைப்படத்தின் கதையை அஜித்குமாரிடம் கூறினேன். தனது இயக்குநர் நடந்து போகக் கூடாது என்று எனக்கு பைக் வாங்கி கொடுத்தார். மற்றொரு நாள், எனக்கு என்ன கலர் பிடிக்கும் என்று அஜித்குமார் கேட்டார்.உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று நான் கேட்டேன். வெள்ளை நிறம் தனக்கு பிடிக்கும் என்றார். நானும், எனக்கு வெள்ளை நிறம் பிடிக்கும் என்று தெரிவித்தேன். நான் கூறியதும் அதே நிறத்தில் சான்ட்ரோ கார் வாங்கி கொடுத்தார்.அப்போது எனக்கு கார் ஓட்ட தெரியாது. காரை எடுத்ததும் ஒரு சுவரில் மோதி விட்டேன். அதன் பின்னர், கார் ஓட்டுவதற்கு முறையாக கற்றுக் கொண்டேன்” என்று எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.