பொழுதுபோக்கு
தனி மாணிட்டர் கொடுங்க… இயக்குனர்களை அசிங்கப்படுத்தும் நயன்தாரா; பிரபல தயாரிப்பாளர் விளாசல்!

தனி மாணிட்டர் கொடுங்க… இயக்குனர்களை அசிங்கப்படுத்தும் நயன்தாரா; பிரபல தயாரிப்பாளர் விளாசல்!
சினிமா தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதன் தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் வருவது போன்று, நடிகர் நடிகைகளின் நடத்தையிலும் மாற்றங்கள் இருக்கத்தான் செய்கிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்தில் முழு படத்தையும் ஒரு செட்டுக்குள் வைத்து முடித்துவிடுவார்கள். இதனை மாற்றி, வெளியிலும் படம் எடுக்கலாம் என்று தமிழ் சினிமாவை கிராமத்தை நோக்கி கொண்டு சென்றவர் இயக்குனர் பாராதிராஜா. அதன்பிறகு, அவரை தொடர்ந்து வந்த பல இயக்குனர் இதே கலாச்சாரத்தை கடைபிடித்து வெளியில் படப்பிடிப்பை நடத்தினார். அதேபோல் பிலிமில் படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு டிஜிட்டல் முறையை அறிமுகம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். தனது மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை முழுவதுமாக டிஜிட்டல் கேமராவில் படமாக்கி இருப்பார். அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது தான் கேரவன் கலாச்சாரம்.எம்.ஜி.ஆர், சிவாஜி செட்டுக்குள் நடித்தார்கள். அதனால் படப்பிடிப்பு தளத்தில் மக்களின் வரவு இருக்காது. அதே சமயம், ரஜினிகாந்த, கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் வெளிப்புற படப்பிடிப்பில் இருப்பார்கள். அப்போது மக்கள் கூட்டம் அதிகம் இருந்தாலும் அவர்கள் கேரவன் என்ற ஒன்று இல்லாததால், படப்பிடிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் சக நடிகர்களுடன் பேசிக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு பொழுதை கழிப்பார்கள்.தற்போது கேரவன் கலாச்சாரம் அதிகரித்துள்ளதால், ஹீரோ, ஹீரோயின், காமெடி நடிகர் என பலரும் கேரவன் இருந்தால் நடிக்க வருவேன் என்று அடம் பிடித்து கேரவன் வாங்கிக்கொள்கிறார்கள். அவர்கள் படப்பிடிப்பில் நடிக்கும் நேரத்தை விட கேரவனில் இருக்கும் நேரம் தான் அதிகம் என்று பல தயாரிப்பாளர்கள் புலம்பிக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய சினிமாவில் கேரவன் கலாச்சாரம் எந்த அளவிற்கு சினிமாவை சிதைத்துள்ளது என்று ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.கேரவன் கலாச்சாரம் இல்லாத காலக்கட்டத்தில் சினிமா ஒரு கூட்டு குடும்பமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நடிகர் நடிகைகளை படப்பிடிப்பிடிப்பு தளத்தில், இயக்குனர்களே நெருக்க முடியாத நிலை தான் இருக்கிறது. அவர்கள் கேரவனுக்குள் போனால் எப்போது வெளியில் வருவார்கள் என்றே தெரியவில்லை. கேரவன் கலாச்சாரம் இல்லாதபோது, ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பல நடிகர்களின் ஷூட்டிங் நடைபெறும். அப்போது பிரேக் நேரத்தில், அவர்கள் அனைவரும் ஒன்றாக கூடி சாப்பிடுவார்கள்.அப்போது நடிகர் நடிகைகள் தங்கள் வீட்டில் இருந்து வரும் சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிடுவார்கள். குறிப்பாக சிவாஜி வீட்டு சாப்பாடு, பலருக்கும் ஃபேவரெட். அப்போது சினிமா கூட்டுக்குடும்பம். 1990 வரை ஏ.வி.எம். இப்படித்தான் இருந்தது. இப்போது அந்த குடும்பம் சிதைந்து தனிக்குடித்தனம் மாதிரி ஆகிவிட்டது. கேரவன் கலாச்சாரம் வந்த பிறகு யாரும் யாருடனும் பேசுவதே இல்லை. மொட்டை ராஜேந்திரன் என்ன லச்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனா? அவர் கூட கேரவன் கேட்கிறார்.அதேபோல் நயன்தாரா ஷூட்டிங் தளத்தில் தான் பார்க்க ஒரு மாணிட்டர் தேவை என்று சொல்கிறார் என்று கேள்விப்பட்டேன். அந்த காலத்தில் மாணிட்டரே கிடையாது. ஆனால் இப்போது ஆளுக்கு ஒரு மாணிட்டர் கேட்கிறார்கள். நயன்தாரா தனக்கு ஒரு மாணிட்டர் கேட்டு இயக்குனர்களை அசிங்கப்படுத்துகிறார். இப்படி சலுகைகள் கொடுத்து கொடுத்து தான் சினிமா குட்டிச்சுவராக போய்விட்டது. இந்த கவுரமான தொழில் கவுரவம் இல்லாமல் போனதால் தான் ஏ.வி.எம்., விஜயா வாஹினி போன்ற நிறுவனங்கள் படம் எடுப்பதில்லை என்று கூறியுள்ளார்.