இலங்கை
தேசியப் பாதுகாப்பு மோசம்; காரியவசம் குற்றச்சாட்டு!

தேசியப் பாதுகாப்பு மோசம்; காரியவசம் குற்றச்சாட்டு!
நாட்டின் தேசியப் பாதுகாப்பு விடுதலைப் புலிகளின் காலத்தை விடவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாட்டின் தேசியப் பாதுகாப்பு தற்போது வரலாறு காணாத அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்குள் வைத்து துப்பாக்கிச்சூடுகள் இடம் பெறுகின்றன. பொலிஸார் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகின்றது. வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து படுகொலைகள் இடம்பெறுகின்றன. ஆனால், ‘ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்களே உயிரிழக்கின்றனர்’ எனக்கூறி இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.
சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கே மக்கள் அரசாங்கத்தை தெரிவு செய்கின்றனர். எனவே,கொலை செய்யப்படுபவர்கள் யாரென்பது முக்கியம் அல்ல. எதற்காக இவ்வாறு படுகொலைகள் இடம்பெறுகின்றன என்பதே பிரதானமான விடயம். எதிர்க்கருத்துகள் உடையவர்களைக் கட்டுப்படுத்த முடியாதபோது, அவர்களைப் படுகொலை செய்துவிடும் ஆட்சியை பாசிசவாத ஆட்சியென்றே அழைப்பார்கள். ஆதலால், இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் ஆட்சி தொடர்பில் எமக்குப் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், புலிகளின் காலத்தில் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை.