இலங்கை
பிரபாகரனை கண்டுபிடித்த நாட்டில், இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியவில்லை ; சாமர சம்பத்

பிரபாகரனை கண்டுபிடித்த நாட்டில், இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியவில்லை ; சாமர சம்பத்
பிரபாகரன் இருந்த இடத்தையே கண்டுபிடித்த இந்த நாட்டில், நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. பொது மக்கள் பாதுகாப்பு டுபாயில் இருந்தே வழிநடத்தப்படுகிறது என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இப்போது தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதனையும் கூற முடியாத நிலைமையே உள்ளது. முதலில் மக்களின் பாதுகாப்பு அவசியமானது. அந்தப் பாதுகாப்பு இல்லாமலே உள்ளது.
நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி சூட்டை நடத்திய இஷாரா செவ்வந்தி என்ற பெண் இன்னும் நாட்டுக்குள்ளேயே இருப்பதாக அண்மையில் ஊடக நிகழ்ச்சியொன்றில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார். அப்படியென்றால் அந்தப் பெண்ணை ஏன் கைது செய்ய முடியவில்லை.
இதுவொரு சிறிய நாடு, பொலிஸ்மா அதிபரையே பிடிக்க முடியுமென்றால், பிரபாகரன் இருந்த இடத்தையே கண்டுபிடிக்க முடியுமென்றால் ஏன் இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. முடிந்தால் ஒரு மாத காலத்திற்குள் அவரை பிடித்துக்காட்டுங்கள் என்று கோருகின்றோம்.
அந்த சம்பவத்தில் 12 பேரை கைது செய்துள்ளதாக கூறினாலும் அதன் பிரதான சூத்திரதாரியை பிடிக்க முடியவில்லை.
இப்போது பொதுமக்களின் பாதுகாப்பு டுபாயில் இருந்தே வழிநடத்தப்படுகிறது.
அங்கிருந்து தொலைபேசி மூலம் கொலைகளை நடத்துகின்றனர். இறுதியில் அனைவருக்கும் டுபாயில் போய் இருக்கவே வேண்டிவரும். இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் அமெரிக்கா ஜனாதிபதியினால் அறிவிடப்பட்ட வரி அவ்வேறே இலங்கையில் செயற்படுத்தப்பட்டால் நிலைமை என்னவாகும். இங்குள்ள ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைமை ஏற்படும். இதனால் இதனை குறைக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.