பொழுதுபோக்கு
மாஸ் படம்… வில்லனுக்கு வயசாகிடுச்சி உங்களுக்கு ஏன் வயசாகல? பாட்ஷா குறித்து ரஜினியிடம் கேட்ட பிரபல இயக்குனர்!

மாஸ் படம்… வில்லனுக்கு வயசாகிடுச்சி உங்களுக்கு ஏன் வயசாகல? பாட்ஷா குறித்து ரஜினியிடம் கேட்ட பிரபல இயக்குனர்!
சினிமா என்ற கலையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அணுகுவார்கள். சினிமா என்பதை மக்களுக்கான கலையாகவும், சமூக மாற்றத்திற்கான கருவியாகவும் கருதுபவர்கள் மிகச் சிலர் தான். இவர்களை தவிர வணிக லாபத்திற்காக சினிமாவை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால், மக்களை மகிழ்விக்கும் வகையில் கமர்ஷியல் படங்களை இவர்கள் தொடர்ந்து எடுப்பார்கள்.அந்த வகையில், கேங்க்ஸ்டர் படங்களுக்கு முன்னோடியாக ஹாலிவுட்டில் வெளியான ‘காட்ஃபாதர்’ திரைப்படத்தை கூறுவது போன்று, கமர்ஷியல் படங்களுக்கு ஒரு பாதை அமைத்துக் கொடுத்த படமாக ‘பாட்ஷா’ திரைப்படத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், அதன் பின்னர் வந்த எத்தனையோ படங்களில் ‘பாட்ஷா’-வின் தாக்கத்தை நாம் பார்த்திருக்கிறோம்.ஆனால், ‘பாட்ஷா’ திரைப்படத்திலும் நிறைய லாஜிக் மீறல்கள் உள்ளன. இது போன்ற குறைகளை ரஜினிகாந்திடமே வெளிப்படையாக கூறிய ஒரு சம்பவத்தை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில், இதனை கே.எஸ். ரவிக்குமார் பகிர்ந்து கொண்டார்.அதன்படி, ‘பாட்ஷா’ திரைப்படத்தை முதன்முறையாக பார்த்ததும், அதில் இருந்த குறைகளை ரஜினிகாந்திடம் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார். அதாவது, படத்தில் இருக்கும் வில்லன் பாத்திரங்கள் தொடங்கி அனைவருக்கும் வயதானதை போன்ற தோற்றம் இருக்கிறது. ஆனால், ரஜினிகாந்தின் பாத்திரம் மட்டும் அப்படியே இளமையாக இருக்கிறது என்று கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.இதனைக் கேட்ட கே.எஸ். ரவிக்குமாரின் நண்பர்கள், குறைகளை கூறியதற்காக அவரை கடிந்து கொண்டார்களாம். இதனால், ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு கே.எஸ். ரவிக்குமாரை அழைத்த ரஜினிகாந்த், “நாம் இணைந்து ஒரு படம் பண்ணுவோமா?” என்று கேட்டுள்ளார்.இதன் மூலம் ரஜினிகாந்தின் குணத்தை எடுத்துக் கூறிய கே.எஸ். ரவிக்குமார், ஒரு படத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டுவதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளார்.