இந்தியா
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; விரைவில் சிறப்பு சட்டமன்ற கூட்டம்: என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தல்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; விரைவில் சிறப்பு சட்டமன்ற கூட்டம்: என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தல்
புதுவை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என் ஆர் காங்கிரஸ் எம் எல் ஏக்கள் வலியுறுத்தி இருந்தனர். புதுச்சேரி, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் மாநில அந்தஸ்து குறித்து விவாதிக்க சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.புதுவை கவர்னர்கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுகாதாரத்துறை இயக்குனராக அரசு ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளரான செவ்வேளை கவர்னர் கைலாஷ்நாதன் நியமித்தார்.ஏற்கனவே, இந்த பதவிக்கு மற்றொரு பெண் அதிகாரி பெயரை முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்துள்ளதாகவும் அதற்கு அனுமதி அளிக்காமல் கவர்னர் கைலாஷ்நாதன், செவ்வேளை நியமித்ததாகவும்கூறப்படுகிறது.இதனால் அதிருப்தியடைந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, தனது துறையில் ஒரு அதிகாரியை நியமிக்க எனக்கு உரிமை இல்லையா? அப்படியிருக்க முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமா? என்று தனது எம்.எல்.ஏக்களிடம் அதிருப்தியில் பேசி இருக்கிறார். இதனால் முதல்- அமைச்சர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் காட்டுத்தீ போல பரவியது.இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆரோவில் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவரை என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினர். அப்போது கவர்னரின் செயல்பாடு குறித்து முதலமைச்சர் ரங்கசாமி எல்ஏக்களிடம் வேதனையோடு தெரிவித்தார். இதற்குமேல் பதவியில் நீடிக்கவேண்டுமா? என்றும் கேட்டுள்ளார். அதற்கு எம்.எல்.ஏ.க்கள், நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். எப்போதும் உங்களுடனேயே, உங்களுக்கு உறுதுணையாகவே இருப்போம் என்று உறுதியளித்தனர். அதன்பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது வீடு திரும்பினார்.தொடர்ந்து அண்ணாமலை ஓட்டலில் அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் துணை சபாநாயகர் ராஜவேலு, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர், சந்திர பிரியங்கா ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் செயலாளர் என்.எஸ்.ஜே.ஜெயபால், முன்னாள் துணை சபாநாயகர் பக்தவச்சலம் ஆகியோரும் கலந்து கொண்டனர். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், காரைக்கால் அமைச்சர் திருமுருகன் ஆகியோர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவதாக தெரிவித்தனர்.முடிவில், அனைவரும் அங்கிருந்து சட்டசபைக்கு வந்தனர். அங்கு சபாநாயகர் செல்வத்தை தனியாக சந்திந்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் 5மணி நேரம் நடத்தது. அப்போது கவர்னரின் செயல்பாடு தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.அதாவது கவர்னரின் செயல்பாட்டால் முதல்-அமைச்சர் அதிருப்தியில் இருப்பதாகவும், சமாதானம் ஆக மறுப்பதாகவும் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை அளித்தனர். அதில் புதுவை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.மாநில அந்தஸ்து இந்த சந்திப்புக்கு பின்பு அமைச்சர் லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறுகையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சேர்ந்து சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டக்கோரி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். இந்த கூட்டத்தில் மாநில அந்தஸ்து தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம். இதுவரை பலமுறை மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும், இப்போது மாநில அந்தஸ்து தொடர்பாக விவாதிக்க வேண்டிய அவசர சூழ்நிலை எழுந்துள்ளது’ என்றார்.அதன்பின் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வீட்டிற்கு சென்று சபாநாயகர் செல்வத்திடம் பேசிய விவரங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அவர்கள் விளக்கி கூறினார்கள். பா.ஜனதா தலைவர்கள் வருகை இந்த விவகாரம் குறித்து மேலிடத்துக்கு தெரியப்படுத்த உள்ள நிலையில் முதல் அமைச்சர் ரங்கசாமியை சமாதானம் செய்ய டெல்லி மேலிட பா.ஜனதா தலைவர் விரைவில் புதுச்சேரிவருவார்கள் என்று கூறப்படுகிறது.பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி