இலங்கை
யாழ் நகரத்தில் திடீர் சோதனை ; யாழ் மாநகர முதல்வர் வழங்கிய அறிவுறுத்தல்

யாழ் நகரத்தில் திடீர் சோதனை ; யாழ் மாநகர முதல்வர் வழங்கிய அறிவுறுத்தல்
யாழ்ப்பாணம் மாநகரத்தின் மத்தியில் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் விசேட திடீர் கள விஜயம் ஒன்றினை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா கடந்த 8ம் திகதி மேற்கொண்டிருந்தார்.
மேற்படி விஜயத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கடைகள், வீதியோர பழங்கள் விற்பனை ஊடாக போக்குவரத்து செய்ய முடியாமல் பொது மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆராய்ந்து நடைபாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விற்பனைப் பொருட்களை அப்புறப்படுத்துமாறு கடை நடாத்துனர்களுக்கு முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.
முதல்வரின் அறிவுறுத்தலை மீறி தொடர்ந்தும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடைபாதையில் விற்பனைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமாக இருந்தால் மாநகர வருமான வரி பரிசோதகர்களினால் முன்னறிவித்தல் இன்றி பொருட்கள் மாநகர வாகனங்களை கொண்டு வந்து அகற்றப்படும் என்றும் வியாபாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
முதல்வரின் மேற்படி விஜயத்தில் மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பொதுச் சுகாதார பொறியியற் பிரிவு அதிகாரிகள், மாநகர பிரதான வருமானவரி பரிசோதகர் உள்ளிட்ட பலர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.