பொழுதுபோக்கு
60-களில் வாங்கிய வீடு; விருதுகளும், போட்டோக்களும் என்ன சொல்கிறது? கே.பாலச்சந்தர் ஹோம்டூர் வைரல்!

60-களில் வாங்கிய வீடு; விருதுகளும், போட்டோக்களும் என்ன சொல்கிறது? கே.பாலச்சந்தர் ஹோம்டூர் வைரல்!
சென்னை வாரன் சாலையில் அமைந்துள்ள இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் இல்லம், வெறும் செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல; அது கலை, குடும்பம், இயற்கை, மற்றும் தேசியப் பெருமைகளின் ஒரு காவியச் சங்கமம். இது ஐயா வாழ்ந்த இடம் இல்லையா? 1968-69களில் இந்த வீட்டை வாங்கினார். ‘மேஜர் சந்திரகாந்த்’ திரைப்படம் வெளியான பிறகு, அவர் சினிமா துறையில் நுழைந்த புதிதிலேயே இந்த வீட்டை வாங்கினார். முதலில் இதற்கு காமாட்சி என்று தனது தாயாரின் பெயரைச் சூட்டினார். பின்னர், இந்த வீட்டைப் புதுப்பித்த பிறகு, விநாயகா என்று பெயர் மாற்றினார். நாங்கள் ‘கே. பாலசந்தர் இல்லம்’ என்று வைக்கக் கூடாதா என்று எவ்வளவோ கேட்டோம். ஆனால், அவர் உறுதியாக ‘விநாயகர் பெயர்தான் வைப்பேன்’ என்று சொல்லிவிட்டார். காரணம், வாரன் ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலின் தீவிர பக்தர் அவர். அதனால்தான், இது ‘விநாயகா அப்பார்ட்மென்ட்ஸ்’ ஆனது.””வேலை முடிந்தால், ஐயா வேறு எங்குமே போக மாட்டார், நேராக வீட்டிற்குத்தான் வருவார். இந்த இடம் அவருக்கு அவ்வளவு பிடித்தமான ஒன்று.”நாகலிங்க மரத்தின் நிழலில்…”இந்த வீட்டைப் பற்றிச் சொல்லும்போது, இங்குள்ள நாகலிங்க மரத்தைப் பற்றி நிச்சயம் சொல்ல வேண்டும். அவர் இந்த வீட்டை வாங்கியபோதிலிருந்தே இந்த மரம் இங்கு இருக்கிறது. இது மிக மிகப் பழமையான மரம். தாவரவியல் ரீதியாகவும் இது ஒரு சக்திவாய்ந்த மரம் என்று சொல்வார்கள். இதன் பூவைப் பார்த்தால், சிவலிங்கம் போன்று இருக்கும். மேலும், இது ஆண்டு முழுவதும் இலைகளுடன் இருக்கும், இலைகள் உதிர்ந்தாலும் உடனே தளிர்த்துவிடும். இது ஒரு எவர்கிரீன் மரம். இதற்கு ஒரு தனிப்பட்ட மணம் உண்டு, சிவபெருமானுக்கு மிகவும் உகந்த மரம் இது.””இந்த மரத்தைப் பூஜிப்பவர்கள் எப்போதுமே ஆசிரியர்களாக இருப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கை உண்டு. ஐயாவின் விஷயத்தில் இது மிகவும் பொருத்தமாக இருந்தது. அம்மா கூட தினமும் இந்த பூக்களை வைத்துதான் பூஜை செய்வார்கள். இந்த இடத்தைப் புதுப்பிக்கும்போது, பில்டர்கள் இந்த மரத்தை வெட்டிவிடலாம் என்று கேட்டார்கள். ஆனால், ஐயா உறுதியாக, ‘இந்த மரம் இருந்தால்தான் நான் இந்த இடத்தையே கொடுப்பேன்’ என்று சொல்லிவிட்டார். அப்பா மறைந்த பிறகும், நாங்களும் இந்த மரத்தைப் பேணிக்காத்து வருகிறோம். இது தானே வளரும் மரம். சென்னையிலேயே மிகச் சில வீடுகளில்தான் இந்த நாகலிங்க மரம் உண்டு.”நினைவுக் கூடம்: காலத்தின் சாட்சி”வீட்டின் உள்ளே நுழைந்தால், பல புகைப்படங்கள் எங்களை வரவேற்கும். அப்பா மறைந்த பிறகு, அவரது எழுதும் அறையான நான்காவது மாடியில் ஒரு கேலரியை உருவாக்கினோம். ஆரம்பத்தில் இந்த பொருட்களை வைக்க எங்களுக்கு இடமில்லை. கொஞ்ச காலம் கவிதாலயா அலுவலகத்தில் வைத்திருந்தோம். பிறகு, அவற்றைச் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்பதால், இந்த இடத்தில் வைப்பதற்கு அனுமதி கேட்டு, இங்கு கொண்டு வந்துள்ளோம். இது ஐயாவின் நினைவைப் போற்றுவதில் எங்கள் கடமை.””இங்கு தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை அனைவரும் இருப்பார்கள். அவரது வாழ்க்கையின் மைல்கற்கள், விருதுகள், தேசிய விருதுகள், மாநில விருதுகள் என அனைத்தும் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். ஐயா, ஜெயலலிதா அம்மா, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் என அனைவரும் இங்கு புகைப்படங்களில் உள்ளனர். ஒவ்வொரு விருதும், அது சிறியதாக இருந்தாலும், எதற்காக வழங்கப்பட்டது என்ற முழு தகவலுடன், மிகுந்த மரியாதையுடன் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது.”