பொழுதுபோக்கு
‘பனி விழும் மலர் வனம்’… எஸ்.பி.பி பாடலை அவரது குரலில் பாடி அசத்திய ஜானகி: த்ரோபேக் வீடியோ!

‘பனி விழும் மலர் வனம்’… எஸ்.பி.பி பாடலை அவரது குரலில் பாடி அசத்திய ஜானகி: த்ரோபேக் வீடியோ!
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இசை ஆர்வலர்களுக்கும் ஏற்பட்ட இழப்பு என்றால் அது எஸ்.பி.பி-யின் மறைவாக தான் இருக்கும். நடிப்பில் புதுமை காண்பிப்பது கூட ஓரளவிற்கு எளிதானதாக எடுத்துக் கொண்டாலும், குரலில் புதுமை காண்பித்து ஒவ்வொரு பாடலுக்கு ஏற்ற வகையில் தனது குரலை மாற்றுவது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை.ஆனால், அதனை எஸ்.பி.பி மிக இயல்பாக செய்யக் கூடியவர். சோகப் பாடல்கள் என்றால் பலரும் ஒரே மாதிரியான சாயலில் பாடுவார்கள். ஆனால், அதிலும் கூட நிறைய வேரியேஷன் காட்டும் ஆற்றல் எஸ்.பி.பி-க்கு இருந்தது. இப்படி எவ்வளவோ பாடல்களை அவரது திரைப்பயணத்தில் உதாரணமாக கூறலாம்.பின்னணி பாடகராக மட்டுமல்லாமல் நல்ல குணச்சத்திர கலைஞராகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் தனது பணியை மிகச் சிறப்பாக செய்தவர் எஸ்.பி.பி. தெலுங்கில் கமல்ஹாசனுக்காக குரல் கொடுத்தது முதல் தமிழில் ‘காதலன்’ போன்ற படங்களில் நடித்தது வரை இதனை எடுத்துக்காட்டாக கூறலாம்.இதேபோல், பின்னணி பாடகிகளில் ஜானகிக்கு இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் உள்ளது. தனது இனிமையான குரலால் ரசிகர்களை வசீகரிக்கும் கலை, ஜானகிக்கு மிகச் சிறப்பாக வரக் கூடிய ஒன்று. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய நிறைய பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக, ‘பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு’, ‘கூ கூ என்று குயில் கூவாதோ, ‘சந்தன காற்றே’, ‘கண்மணியே பேசு’, ‘அந்தி வரும் நேரம்’ என நிறைய பாடல்கள் ரசிகர்களின் மனதை வருடிச் சென்றன.அந்த வகையில், ‘நினைவெல்லாம் நித்யா’ திரைப்படத்தில் எஸ்.பி.பி-யின் குரலில் இடம்பெற்ற ‘பனி விழும் மலர் வனம்’ தனக்கு மிகவும் பிடித்தமான பாடல் என்று ஜானகி குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து பேசிய ஜானகி, இப்படலையும் அவரது குரலில் பாடினார்.அதன்படி, “எஸ்.பி.பி-யின் குரலில் எத்தனையோ பாடல்கள் எனக்கு பிடிக்கும். அதில் குறிப்பிட்ட ஒரு பாடலை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அவருடைய பாடலை நான் பாடிக் காண்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று கூறிய ஜானகி, ‘பனி விழும் மலர் வனம்’ பாடலை பாடி அசத்தினார்.