இலங்கை
வரலாற்றில் முதல் 9A: ஊற்றுப்புலம் பாடசாலையை பலரும் திரும்பிப் பார்க்க வைத்த மாணவன்

வரலாற்றில் முதல் 9A: ஊற்றுப்புலம் பாடசாலையை பலரும் திரும்பிப் பார்க்க வைத்த மாணவன்
கிளிநொச்சி ஊற்றுப்புலம் படசாலையில் கா.பொ.த சாதாரண தரத்தில் 9A சித்தி பெற்று மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
கிளிநொச்சியின் மேற்கு பகுதியில் நகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிராமம் அது. பெரிதாக எவரும் கண்டுகொள்ளாத ஊர் அது. முக்கியமாக கல்வித்துறையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை என்றால் என்ன? க.பொ.த சாதாரன தரப் பரீட்சை பெறுபேறுகள் என்றால் என்ன அந்த பாடசாலையின் பெறுபேறு என்ன என்று எவரும் கேட்டுக்கொள்வதில்லை.
வலயக் கல்வி அலுவலகம் மாத்திரம் தனது புள்ளிவிபர பதிவுக்காக பெறுபேறுகளை கேட்டுகொள்வார்கள். அவ்வளவுதான்.
பாடசாலை ஆரம்பித்த 1993 என நினைக்கின்றேன். அன்று இன்று வரை வளப்பற்றாக்குறை இன்றி இயங்கிய நாட்கள் இல்லை என்றே கூற வேண்டும்.
1996 கிளிநொச்சி இடப்பெயர்வுக்கு முன் அந்த பாடசாலையினை தமிழ்த்தினப் போட்டியில் சிறுவர் நாடகத்திலும், கிளித்தட்டு போட்டியிலும் அந்தப் பாடசாலையினை மாவட்ட மட்டத்தில் பலரும் திரும்பி பார்த்தனர்.
அப்போதே இப்படியொரு பாடசாலை இருக்கிறது என்பது ஏனைய பல பாடசாலைகளுக்கு தெரியவந்தது. அதற்காக உழைத்தவர் அப்போது அந்த பாடசாலையில் தொண்டர் ஆசிரியராக கடமையாற்றி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சிங்கராசா ஆசிரியர். அவர் அந்த ஊர் மக்களும், மாணவர்களும் சிங்கா சேர் என்று அழைப்பர்.
இதன் பின்னர் மறுபடியும் அப்பாடசாலையினை எவரும் கண்டுகொள்வதில்லை. இப்படி பல வருடங்கள் கடந்தோடிய நிலையில் தற்போது அப்பாடசாலையினை ஒரு மாணவன் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றான்.
சக்திவேல் குயிலன் என்ற அந்த மாணவன் தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரன தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் 9 ஏ பெறுபேறுகளை பெற்றதன் மூலம் அப்பாடசாலையின் வரலாற்றில் முதற் தடவையாக 9ஏ பெற்ற வரலாற்று சாதனையினை ஏற்படுத்தியதன் மூலமே குயிலன் பாடசாலையினையும், ஊரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறான்.
இந்த ஒரு மாணவன் பெற்ற 9 ஏ ஏன் சாதனை என்றால், வளப்பற்றாக்குறையுடன் இயங்கும் பாடசாலை கல்வியினை பிரதானமாகவும், அந்த ஊரில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் மேலதிக கல்வியையும் மட்டுமே பெற்றிருக்கிறான் குயிலன்.
வறுமையான குடும்பம், பெற்றோர்கள் கூலித்தொழிலை செய்கின்றவர்கள். தினமும் வேலை கிடைக்காது வரையறுக்கப்பட்ட சொற்ப வருமானம், வசதிவாய்ப்புக்கள் குறைவு, இந்த வயதில் கல்வியை குழப்பும் வகையில் கவனக் கலைப்பான்கள் அதிகம், நகர்புற பிள்ளைகள் போன்று பெற்றோர்களால் மேலதிக வகுப்பு, பிரத்தியோக வகுப்பு, அந்த பயிற்சி புத்தகம், இந்த பயிற்சி புத்தகம் என எதுவும் இல்லை, தம்பி படிச்சனீயா? என்ன படிச்சனீ? இந்த முறை எத்தனை மாக்ஸ்? என கேள்வி கேட்காத பெற்றோர்கள் என அவனை சுற்றி காணப்பட்ட அந்த சூழலுக்குள் இருந்து படித்து அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெறுவது என்பது சாதனைதானே?!
இந்த சாதனைக்கு அவனது பாடசாலையும், அந்த கவ்வி நிலையமும், படிப்பதற்கு தடை போடாத அந்த ஏழை பெற்றோரும், அவனது முயற்சியும், உழைப்பும்தான் காரணம்.
இதன் மூலமே அவன் சாதித்திருக்கிறான்.
அவனது இந்த சாதனையால்தான் இன்று ஊற்றுப்புலம் என்ற அந்த கிராமத்து பாடசாலையினை பலரும் திரும்பி பார்க்கின்றனர்.
ஊரும், பெருமைகொள்கிறது. தனது வரலாற்றில் முதல் தடவையாக ஒருவன் 9ஏ பெறுபேறுகளை பெற்றது அவர்களை பெருமை கொள்ள வைக்கிறது.
அனுசரணை