இலங்கை
பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவல் ; கோடிக்கணக்கு பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவல் ; கோடிக்கணக்கு பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களை மத்திய குற்ற விசாரணை பணியகம் பறிமுதல் செய்துள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும் அறிவுறுத்தல்களின் பேரில், நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் சோதனைகளுக்கு இணங்க, பதில் பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில்,
மத்திய குற்ற விசாரணை பணியகத்தின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையை முன்னெடுத்திருந்தது.
இதன்போது ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யத் தடைசெய்யப்பட்ட, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட, 21 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றின் பெறுமதி ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பறவைகள் சரணாலய வளாகத்தில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 04 கஞ்சா செடிகளுடன், இந்த விலங்கு பண்ணையின் முகாமையாளர் மற்றும் களஞ்சியசாலை கட்டுப்பாட்டாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 மற்றும் 50 வயதான மாத்தறை மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.