பொழுதுபோக்கு
அந்த பொண்ணு கூட நடிக்க முடியாது; காதல் காட்சியில் சொதப்பிய கேப்டன்: நடிகை ஊர்வசி ஃப்ளாஷ்பேக்!

அந்த பொண்ணு கூட நடிக்க முடியாது; காதல் காட்சியில் சொதப்பிய கேப்டன்: நடிகை ஊர்வசி ஃப்ளாஷ்பேக்!
தமிழ் சினிமாவில் ஆளுமை மிக்க மனிதர் யாரென்று கேட்டால், எல்லோரும் ஒருமித்த குரலில் விஜயகாந்த் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கான தலைமைப் பண்பை தனது வாழ்நாளின் இறுதி மூச்சுவரை விஜயகாந்த் பின்பற்றினார்.இதற்கு எத்தனையோ பேர் தங்கள் அனுபவங்களை கூறியுள்ளனர். குறிப்பாக, நடிகர் சங்க தலைவராக இருந்த போது அனைத்து நடிகர்களையும் அழைத்துச் சென்று வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, சங்கத்தின் கடனை அடைத்தது, விஜயகாந்தால் மட்டுமே சாத்தியமானது என்று நிறைய பேர் இன்றளவும் கூறுகின்றனர்.இந்நிலையில், விஜயகாந்துடனான தனது அனுபவங்கள் குறித்து நடிகை ஊர்வசி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான ஊர்வசி, மலையாள சினிமாவில் பல்வேறு அழுத்தமான பாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, காமெடி வேடங்களில் ஊர்வசியின் நடிப்பு ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும். இந்த சூழலில் விஜயகாந்த் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஊர்வசி, “இந்தப் பொண்ணு கூட நடிக்க முடியாதுய்யா; தங்கச்சி என்று அழைத்திருக்கிறேன் என்று விஜயகாந்த் கூறினார். மேலும், காதல் காட்சிகளிலும் என்னை அதிகமாக உற்றுப் பார்ப்பது போன்று செய்ய மாட்டார். இதனால், ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே இணைந்து பணியாற்றினோம். கடைசியாக அவரது தயாரிப்பு நிறுவனத்தில் தென்னவன் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினேன். அப்போது, நிறைய கிராமிய உணவுகளை யூனிட்டில் பரிமாறினார்கள்.விஜயகாந்தின் தலைமைப் பண்பு பாதுகாப்பான சூழலை எல்லோருக்கும் உருவாக்கி கொடுக்கும். அப்படி ஒரு ஆற்றல் அவருக்கு இருந்தது” என்று ஊர்வசி தெரிவித்துள்ளார்.