பொழுதுபோக்கு
அவங்களுக்காக நான் தான் பேசுனேன்னு நீங்க சொல்லனும்; ஐஸ்வர்யா ராயை சந்திக்க கண்டிஷன் போட்ட பிரபலம்!

அவங்களுக்காக நான் தான் பேசுனேன்னு நீங்க சொல்லனும்; ஐஸ்வர்யா ராயை சந்திக்க கண்டிஷன் போட்ட பிரபலம்!
திரையில் தோன்றும் நட்சத்திரங்களை பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், திரைக்கு பின்னால் எண்ணற்ற தொழிலாளர்களின் உழைப்பின் மூலமாக தான் ஒரு திரைப்படம் முழுமை பெறுகிறது.இந்த வரிசையில், டப்பிங் கலைஞர்களின் பணி மிக முக்கியமானது. நடிகர்களின் நடிப்பை திரையில் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் இவர்களின் பங்கு முதன்மையானதாக கருதப்படுகிறது.இதில், பல முன்னணி நடிகர்களுக்கு டப்பிங் கலைஞர்கள் குரல் கொடுத்துள்ளனர். இவர்களில் தீபா வெங்கடை பலருக்கு அறிந்திருக்கும். டப்பிங் கலைஞரான இவர், சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகையாகவும் வலம் வந்தார். குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இவர் தான் பின்னணி குரல் கொடுத்தது. இந்நிலையில், ஐஸ்வர்யா ராயை நேரில் சந்தித்த தருணம் குறித்து தீபா வெங்கட் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். சமீபத்தில், jfwbinge யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இதனை தீபா வெங்கட் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, “என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று, ஐஸ்வர்யா ராயை நேரில் சந்தித்தது. ஐஸ்வர்யா ராயை பார்ப்பதற்காக, ஒரு இயக்குநர் என்னை அழைத்துச் சென்றார். அப்போது, ஒரு கண்டிஷனை அவரிடம் கூறினேன்.அதாவது, மற்றவர்களை போன்று சாதாரணமாக புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பக் கூடாது. நான் என்ன செய்திருக்கிறேன் என்று ஐஸ்வர்யா ராயிடம் கூற வேண்டும். குறிப்பாக, அவருக்காக நான் டப்பிங் பேசினேன் என்று ஐஸ்வர்யா ராய் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினேன்.இதையறிந்த ஐஸ்வர்யா ராய் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தன்னுடைய கடின உழைப்பை சரியாக மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக எனக்கு நன்றி தெரிவித்தார்” என தீபா வெங்கட் கூறியுள்ளார்.