இலங்கை
தவறான குறிவைப்புகள் இலக்காகும் பொதுமக்கள்; பாதாள உலகக்குழு அட்டகாசம் பொலிஸார் தெரிவிப்பு

தவறான குறிவைப்புகள் இலக்காகும் பொதுமக்கள்; பாதாள உலகக்குழு அட்டகாசம் பொலிஸார் தெரிவிப்பு
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் பயன்படுத்தி பாதாள உலகக் கும்பல் துப்பாக்கிச்சூடுகளை நடத்துவதால், இலக்குகள் தவறி அப்பாவி மக்கள் உயிரிழக்கநேரிடுகிறது அல்லது காயமடைகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளன.
பாதாள உலகக்கும்பலில் பயிற்சிபெற்ற துப்பாக்கிதாரர்களின் பற்றாக்குறை நிலவுகிறது என்றும் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அல்லது நாட்டிலிருந்து தப்பிச்சென்ற நிலையில் தங்கள் இலக்குகளை அடைய போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைத் துப்பாக்கிதாரர்களாகப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது என்றும் தெரியவருகின்றது.
போதைப்பொருளுக்காகவோ அல்லது பணத்துக்காகவோ துப்பாக்கிச்சூடுகளை நடத்தும் இந்த நபர்கள், துப்பாக்கிகளைச் சரியாகக் கையாளத் தெரியாததாலும், சுடும்போது ஏற்படும் பயத்தாலும் துப்பாக்கிச்சூடுகள் தவறவிடப்படுகின்றன. இதனால், கடந்த சில வாரங்களாக அப்பாவி மக்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, இந்த ஆண்டின் 7 மாத காலப்பகுதியில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் தூண்டப்பட்டு 61 துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.