பொழுதுபோக்கு
வயதோ 60, ஆனா இன்னும் பச்ச புள்ளையா இருக்கீங்களே மேடம்; குழந்தை குரலில் பேசி அசத்திய பிரபல நடிகை!

வயதோ 60, ஆனா இன்னும் பச்ச புள்ளையா இருக்கீங்களே மேடம்; குழந்தை குரலில் பேசி அசத்திய பிரபல நடிகை!
சினிமாவை பொறுத்த வரை பெரும் ஆச்சரியத்தை நிகழ்த்தக் கூடிய ஆற்றல் டப்பிங் கலைஞர்களுக்கு இருக்கும். எந்த மாதிரியான கதாபாத்திரத்திற்கும், எப்படி ஒரு சூழலாக இருந்தாலும் கச்சிதமாக டப்பிங் பேசக் கூடிய நபர்களுக்கு என்றுமே மவுசு அதிகம் என்று கூறலாம்.ஏனெனில், ஒரு காட்சியின் முக்கியத்துவம் நடிகர்களுக்கு எந்த அளவிற்கு இருக்கிறதோ, அதே அளவிற்கு அவர்களுக்கு டப்பிங் பேசக் கூடிய கலைஞர்களுக்கு இருக்கிறது. நடிகர்களின் நடிப்பாற்றலை மெருகேற்றி காட்டும் திறமை டப்பிங் கலைஞர்களுக்கு இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது.அதன்படி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில், எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த ஒரு டப்பிங் கலைஞர் உண்டு என்றால், அவர் ஸ்ரீஜா ரவி தான். 2000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் வணிக விளம்பரங்களுக்கு குரல் கொடுத்து, இந்தியத் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவருடைய பயணம், 1975 ஆம் ஆண்டு ஜி. அரவிந்தன் இயக்கிய ‘உத்தராயணம்’ திரைப்படத்தில் பின்னணி குரல் கலைஞராகத் தொடங்கியது. இன்று, இவரது சாதனைகளுக்கு சான்றாக நான்கு கேரள மாநில திரைப்பட விருதுகள், ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் இரண்டு கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதுகள் எனப் பல அங்கீகாரங்கள் சேர்ந்துள்ளன.ஸ்ரீஜா ரவிக்கு மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசும் ஆற்றல் உண்டு. இந்த பன்மொழி தேர்ச்சி, வெளிநாட்டு படங்களின் இந்திய பதிப்புகளுக்கு குரல் கொடுப்பதிலும் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகளை எந்த மொழியிலும் சரியாகப் பிரதிபலிக்கும் அவரது திறன், அவரை ஒரு முன்னணி டப்பிங் கலைஞராக நிலைநிறுத்தியுள்ளது.இது மட்டுமின்றி ஒரு நடிகையாகவும் ஸ்ரீஜா ரவி தன்னை நிரூபித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி’, ‘தீரா காதல்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன. இவரது மகளான ரவீனா ரவியும் டப்பிங் மற்றும் நடிப்பில் புகழ்பெற்று விளங்குகிறார். இவரது நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’, ‘மாமன்னன்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.இந்நிலையில், அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு இவர்கள் இருவரும் அளித்த நேர்காணலின் போது, ஒரு குழந்தையை போன்று ஸ்ரீஜா ரவி பேசியது க்யூட்டாக இருந்தது. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.