இலங்கை
அநுர அரசை விரட்ட மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் – திஸ்ஸ அத்தயநாயக்க எச்சரிக்கை!

அநுர அரசை விரட்ட மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் – திஸ்ஸ அத்தயநாயக்க எச்சரிக்கை!
சஜித் பிரேமதாசவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்துக்கு எதிரான அவரின் குரலை அடக்குவதற்குமே அரசாங்கம் மத்திய கலாசார நிதியத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய கலாசார நிதியத்தில் 2017 முதல் 2020 காலப்பகுதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அரசாங்கம் அதுதொடர்பில் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசாங்கம் தெரிவிக்கும் இந்த காலப்பகுதியில் சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்தபோது அவருக்கு கீழே மத்திய கலாசார நிதியம் இருந்து வந்தது.
மத்திய கலாசார நிதியத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கடந்த காலங்களிலும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக 2019இல் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தி குற்றச்சாட்டுக்கள் தெரிவி்க்கப்பட்டபோதும் அதனை உறுதிப்படுத்த முடியாமல் போனது.
அதேபோன்று கோப் குழுவிழும் இதுதொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அப்போதும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு சென்றபோது அதிலும் எந்த பெறுபேறும் கிடைக்கவில்லை.
எனவே அரசாங்கம் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக மத்திய கலாசார நிதியம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு முன்னர், மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் வீதிக்கிறங்குவார்கள் என்றார்.