பொழுதுபோக்கு
இளையராஜா வேண்டாம், யுவன் குரலில் ஒரு ஆன்மா இருக்கு; ஹிட் பாடலில் இசைஞானி குரல் ரிஜக்ட் ஆன சம்பவம்!

இளையராஜா வேண்டாம், யுவன் குரலில் ஒரு ஆன்மா இருக்கு; ஹிட் பாடலில் இசைஞானி குரல் ரிஜக்ட் ஆன சம்பவம்!
இளையராஜாவின் இசையை போலவே அவரது குரலுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றன. ஆனால், இளையராஜாவிற்கு பதிலாக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடலை தனது படத்தில் மாற்றியது குறித்து இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.யுவன் குரலில் ஒரு ஆன்மா இருக்கும் என்று நிறைய பேர் கூறி கேட்டிருக்கிறோம். அதனை நேரில் பார்த்த தருணம் குறித்து பதிவு செய்துள்ள இயக்குநர் சுசீந்திரன், அதன் காரணத்திற்காக இளையராஜா பாடிய பாடலை படத்தில் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.லிட்டில் டாக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அண்மையில் இயக்குநர் சுசீந்திரன் நேர்காணல் அளித்தார். அதில், ‘ஆதலால் காதல் செய்வீர்’ திரைப்படம் தொடர்பாக பல்வேறு தகவல்களை ரசிகர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.அதன்படி, “என்னுடைய மூன்று திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றன. நான்காவது படமான ‘ராஜபாட்டை’ தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பின்னர், என்னுடன் பணியாற்றுவதை பலரும் தவிர்த்தனர்.அந்த சூழலில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ திரைப்படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தேன். அப்படம் என்னுடைய உதவியாளர் லெனின் பாரதியின் கதை. அப்படத்திற்கான க்ளைமேக்ஸை வடிவமைக்க சுமார் 6 மாதங்கள் ஆனது.படத்தின் இறுதிக் காட்சியின் போது படமாக்கப்பட்ட பாடலை யுவன் சங்கர் ராஜா பாடினார். குறிப்பாக, அதனை பாடும் போது யுவனுக்கு அழுகை வந்தது. ஏற்கனவே, ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் இளையராஜாவிடம் பணியாற்றினேன். அதனால் என்னுடன் இருந்தவர்கள் எல்லோரும் இளையராஜா இந்த பாடலை பாடினால் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள்.அதன்படி, இளையராஜாவும் அதே பாடலை பாடிவிட்டார். இப்போது, யாருடைய பாடலை படத்தில் பயன்படுத்தலாம் என்று விவாதம் நடந்தது. யுவன் குரலில் ஒரு ஆன்மா இருப்பதை நான் உணர்ந்தேன். யுவன் குரலில் பதிவு செய்த பாடலை படத்தில் வைக்கலாம் என்று நான் முடிவு செய்தேன்.இதனை யுவனிடம் கூறிய போது அவர் பதறி விட்டார். அப்பாவிடம் சென்று இதை சொல்ல முடியாது என்று யுவன் கூறினார். இளையராஜாவிடம் நான் பேசிக் கொள்கிறேன்; எனக்கு உங்களது குரலில் பாடிய பாடல் தான் வேண்டும் என்று யுவனிடம் நான் தெரிவித்தேன்” என இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார்.