இந்தியா
சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்!

சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.
சீன – இந்திய எல்லையிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020 இல் ஏற்பட்ட பதற்றங்களுக்கு பின்னரான ஐந்தாண்டு காலப்பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் முதன்முறையாக பீஜீங்குக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் போது, சீன உப ஜனாதிபதி ஹான் ஜெங்குடன் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவது பரஸ்பர நன்மை பயக்கும் முடிவுகளைத் தரும் என்றதோடு இரு நாடுகளுக்கும் பொருளாதாரங்களுக்கு இடையிலான திறந்த உரையாடலினதும் முன்னோக்குகளின் பரிமாற்றத்தினதும் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியுள்ளார்.
இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலான இப்பயணத்தின் போது சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ யையும் கலாநிதி ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை தியன்ஜின் இல் இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திலும் அவர் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.