பொழுதுபோக்கு
நானும் அவரும் பிரிந்த தருணம்; அடுத்து வந்த 2 சில்வர் ஜூப்லி படங்கள்; ரஜினி பற்றி உண்மை உடைத்த கமல்!

நானும் அவரும் பிரிந்த தருணம்; அடுத்து வந்த 2 சில்வர் ஜூப்லி படங்கள்; ரஜினி பற்றி உண்மை உடைத்த கமல்!
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பிறகு இரு பெரும் துருவங்கள் என்றால் அது ரஜினிகாந்த் – கமல்ஹாசன் தான் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், வளர்ந்தபின் அவருக்கு அவ்வளவு எளிதில் ஹீரோ வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. வளர்ந்த கமல்ஹாசன், உதவி நடன இயக்குனர், உதவி இயக்குனர், துணை நடிகர் என பல பணிகளை பார்த்து இறுதியாகத்தான் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.அதேபோல் பஸ் கண்டக்டராக இருந்து, திரைப்பட கல்லூரியில் படிக்கும்போதே 1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் ரஜினிகாந்த். அந்த படத்தில் கமல்ஹாசனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார், இவருக்கும் இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துது. அதன்பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட பல படங்களில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடித்து வெற்றிகளை குவித்தனர். ஒரு கட்டத்தில், இவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக நடிக்க முடிவு செய்துள்ளனர்.கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான நினைத்தாலே இனிக்கும் என்ற படம் தான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி படம். சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் நாங்கள் எந்த நிலைமையில் பிரிந்து தனித்தனியாக நடிக்க முடிவு செய்தோம் என்பது குறித்து பேசியுள்ள கமல்ஹாசன், எங்களின் பிரிவுக்கு முன்பு, ஒரு தயாரிப்பாளருக்கு இருவரும் இணைந்து ஒரு படம் நடிப்பதாக இருந்தது. பிரிந்தபின் இருவரும் தனித்தனியாக இரு படங்கள் நடித்ததாக கூறியுள்ளார்.இது குறித்து கமல்ஹாசன் கூறுகையில், நாங்கள் இருவரும் முதலில் நடிக்கத் தொடங்கியபோது, சம்பளத்தையோ, புகழையோ, இவ்வளவு பெரிய மேடைகளில் வந்து நிற்பதையோ நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு புதுமுகமாக ரஜினிகாந்தும், மற்றொரு புதுமுகமாக கமல்ஹாசனும், இந்த வெற்றிச் சக்கரவர்த்திகளாக மாறுவோம் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. எல்லாம் சட்டென்று நிகழ்ந்தது.ஆரம்பத்தில், எங்கள் இருவரையும் இணைத்து பல படங்கள் எடுக்கப்பட்டன. அவை வெற்றி பெறவும் தொடங்கின. பெரும்பாலும், எங்களுக்குக் கிடைத்த வேடங்கள் சிறியதாக இருந்தாலும், அவை நல்ல பாத்திரங்களாக அமைந்தன. கதை எப்போதாவதுதான் எங்களுக்கு சாதகமாக அமையாமல் போனது. இந்த காலகட்டத்தில், நாங்கள் இருவரும் கூடி ஒரு முக்கிய முடிவை எடுத்தோம். “இனி நாம் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம். தனித்தனியாகவே நம் இருவருக்கும் தனித் திறமை உள்ளது,” என்று நான் கூறினேன்.என் நண்பரான அவரும், அதை ஒரு பெரும் மனதுடன் ஒப்புக்கொண்டார். தயாரிப்பாளர்களிடம் பேசி, அப்போது பிரிந்து நடித்த படங்களில், இரண்டு வெள்ளி விழாப் படங்கள் கிடைத்தன! அதில் ஒன்று ‘கல்யாண்ராமன்’ மற்றொன்று ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ஆகிய படங்கள் ஒரே தயாரிப்பாளருக்காகச் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு படம் மட்டும் இருவரும் செய்வதாக இருந்த நிலையில், அவருக்கு இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தோம் என்று கூறியுள்ளார்.இந்த நிகழ்வு, திரையுலகில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தது. இரண்டு ஜாம்பவான்கள் தனித்தனியாகப் பயணித்து, தங்கள் தனிப்பட்ட ஆளுமையால் தனிப்பட்ட வெற்றிகளைப் பெற்றனர். தற்போது இருவருமே தமிழ் சினிமாவின் ஆளுமைகளாக நிலைத்திருக்கின்றனர்.