சினிமா
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவு!

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவு!
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தனது 87ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இயற்கை எய்தியுள்ளார்.
இவர் 1955ஆம் ஆண்டு ‘மகாகவி காளி தாசா” என்ற கன்னடத் திரைப்படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து சிவாஜிகணேசனின் ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நடித்தார் தமிழ் சினிமாவுக்குப் பரிச்சயமானார். இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் இவர் நடித்திருந்த ‘நாடோடி மன்னன் திரைப்படத்தின் வெற்றி தமிழ்மக்களுக்கு இன்னும் இவரை நெருக்கமாக்கியது.
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் போன்ற தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலருடனும் சரோஜாதேவி இணைந்து பணியாற்றியிருக்கிறார். தமிழ், தெலுங்கு. இந்தி, கன்னடம் என சுமார் 30 வருடங்களில், 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த ஒரே நடிகை இவர் தான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இவர் தமிழில் கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார். இவருக்கு 1969ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. அத்தோடு தமிழக அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சரோஜாதேவியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.