இலங்கை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் தென்னைகளில் வெள்ளை ஈயால் பேரழிவு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் தென்னைகளில் வெள்ளை ஈயால் பேரழிவு!
வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ளன என்று தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் இருவாரகாலச் செயற்றிட்டம், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவின் கச்சாய் கிராமத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்காக 150 பணியாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். 150 இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு இயந்திரத்தை இயக்குவதற்கு ஆகக்குறைந்தது நால்வர் தேவை. எனவே, இந்தத் திட்டம் வெற்றி பெறுவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். ஆதலால்,எமது ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் உதவவேண்டும்.
இலங்கையிலேயே வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டம் முதன்முதலில் யாழ். மாவட்டத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மூவாயிரம் மில்லியன் தேங்காய்கள் கிடைக்க வேண்டிய இடத்தில் அதைவிடக் குறைந்தளவு தேங்காய்களே கிடைக்கின்றன. இந்த வீழ்ச்சியில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்ற போதிலும், வெள்ளை ஈக்களின் தாக்கம் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் அமைந்துள்ளது. 2030ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 200 மில்லியன் தேங்காய்களை வருடாந்தம் உற்பத்தி செய்ய வேண்டுமென்ற இலக்குடன் செயற்படவுள்ளோம்-என்றார்.