இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் புதிய தகவல்கள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் புதிய தகவல்கள்
உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியாகாத பல தகவல்கள் அண்மைக்கால விசாரணைகளில் தெரியவந்துள்ளன என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுமாலை நடத்தப்பட்டது. இதன்போது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளன என்று அமைச்சர் நளிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இந்தக் கேள்விக்கு அமைச்சர் நளிந்த தெரிவித்ததாவது:-
உயிர்த்தஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் அசாத் மெளலானா உட்பட தேவையான நபர்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கு இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தில் சந்தேகம் கொள்ளவேண்டிய அவசியமில்லை. இதுவரையில் வெளிவராத பல தகவல்கள் விசாரணைகளில் வெளிவந்தவண்ணம் உள்ளன. அவற்றின் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார். விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம். விசாரணைகள் இன்னும் நிறைவு பெறவில்லை. அதுவிரைவுபடுத்தப்பட்டு, நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கை இடம்பெறும்- என்றார்.