Connect with us

இலங்கை

எமக்குள்ள அதிகாரங்களைக் கையகப்படுத்தி முன்னேறுவோம்! சுரேஷ்

Published

on

Loading

எமக்குள்ள அதிகாரங்களைக் கையகப்படுத்தி முன்னேறுவோம்! சுரேஷ்

கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள விருப்பமற்றவர்களாகவே இருக்கின்றது என்றும் தற்போதைய சூழலில் நாம் எமது நீண்ட போராட்டத்தின் விளைவாக எமக்குக் கிடைத்த மாகாணசபையைக் கையகப்படுத்தி அதன் அதிகாரங்கள் போதாது என்பதை சகலருக்கும் தெரிவித்து எமது இலக்கை நோக்கி நகர்வதே புத்திசாதுர்யமான செயற்பாடாகும் என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ். க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 இதனை வலியுறுத்தும் வகையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி பல்வேறுபட்ட உறுதிமொழிகளை வழங்கி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. 

Advertisement

அதில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படும் என்பதும் புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்படும் என்பதும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்பதும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முக்கியமான உறுதிமொழிகளாக இருந்தன.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஏறத்தாழ பத்துமாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்த உறுதிமொழிகள் எதுவும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளோ நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை.

 ஆனால் நாங்கள் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவோம் என்றும் புதிய யாப்பை கொண்டுவருவோம் என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என்றும் தொடர்ச்சியாக புராணம்போல் ஓதி வருகின்றார்கள்.

 தற்போது முதல்முறையாக எல்லை நிர்ணய பிரச்சினைக்குத் தீர்வு கண்டபின்னரே மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியுமென்று மாகாணசபைகள் அமைச்சர் சந்தன அபேரத்தன தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

 ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆணைக்குழுவினால் எல்லை மீள்நிர்ணயம் செய்தபோதும்கூட அது மலையக தமிழ் மக்களினதும் இஸ்லாமிய மக்களினதும் பிரதிநிதித்துவத்தை கனிசமான அளவில் குறைக்கின்றது என்ற அடிப்படையில் எல்லை நிர்ணயசபையினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணய முடிவுகள் கைவிடப்பட்டன.
பழைய விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்தி மாகாணசபைகளை இயங்க வைத்துக்கொண்டு புதிய தேர்தல்முறை, எல்லை மீள்நிர்ணயம் போன்றவற்றை சமகாலத்தில் செய்யலாம் என தமிழ் மக்கள் வலியுறுத்தியும்கூட அதனை மைத்திரி அரசாங்கமோ ரணில் அரசாங்கமோ கண்டுகொள்ளவில்லை.

 தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாங்கள் பதவிக்கு வந்தவுடன் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவோம் என்று கூறியபோதிலும், முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்கள் கூறியவற்றையே எவ்வித சொல்வேறுபாடுமின்றி கூறத் தொடங்கிவிட்டது. தமிழ் கட்சிகளைச் சேர்ந்த பலர் இந்த அரசாங்கத்தை நம்பி மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுமென்றும் புதிய யாப்பு ஒன்று உருவாக்கப்படும் என்றும் கனவுலகில் சஞ்சரிப்பதைப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

 தற்போது ஆட்சியில் இருப்பவர்களைப் பொறுத்தவரையில் எவ்வித பிரச்சினைகளுமில்லாமல் அடுத்த நான்கு வருடங்களை எவ்வாறு கொண்டு நடத்துவது என்பதுதான் அவர்களது சிந்தனையே தவிர, பிரச்சினைக்குரிய விடயங்களில் அவர்கள் தலைபோடத் தயாராக இல்லை. இதனை தமிழ் மக்களும் தமிழ்த் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் தரப்புகள் ஒன்றுபட்டு காத்திரமான அழுத்தங்களை அரசாங்கத்திற்குச் செலுத்தாத வரையில், மாகாணசபைத் தேர்தல்கள் என்பது ஒரு கானல் நீராகவே இருக்கும். அடிப்படையில் தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரப்பகிர்வில் விருப்பமற்றவர்களாகவே இருக்கின்றனர். 

Advertisement

கடந்த காலங்களில் அவர்களது பாராளுமன்ற உரைகளும், அவர்களது தொடர் நடவடிக்கைகளும் அதிகாரப் பகிர்விற்கு எதிரானதாகவே இருந்து வந்துள்ளது.
இலங்கை போன்ற நாட்டிற்கு அதிகாரப் பகிர்வு அவசியமற்றது என்றும் அது ஒரு வெள்ளையானைக்குத் தீனி போடுவதைப்போன்று அநாவசிய செலவென்றும் இவர்கள் பிரச்சாரம் செய்தவர்கள். 

வடக்கு-கிழக்கு இணைப்பை இல்லாமல் செய்வதற்காக நீதிமன்றம்வரை சென்று அதை நிறைவேற்றியவர்கள். இத்தகையவர்கள் தாமாக முன்வந்து மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவார்கள் என்று எதிர்பார்ப்பது இலவுகாத்த கிளிக்கதைக்கு ஒப்பானது.

 இந்த நிலையில், தமிழ் மக்கள் தங்களுக்கான அதிகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டுமாக இருந்தால் மாகாணசபைத் தேர்தலும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாகவும் சரியாகவும் நிறைவேற்ற வேண்டியதும் அதிமுக்கியமானது.

Advertisement

 குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கின்ற அதிகாரங்களைக் கையிலெடுப்பதன் ஊடாகவே வடக்கு-கிழக்கைப் பாதுகாக்க முடியும் என்பதுடன் வடக்கு-கிழக்கில் அரசாங்கம் மேற்கொள்ளும் பல்வேறுபட்ட சட்டவிரோத நடவடிக்கைகளையும் ஓரளவிற்காவது நிறுத்த முடியும்.
அதிகாரங்கள் கையில் இல்லாத காரணத்தினால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக தான் நினைத்த அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நாம் வெளிப்படையாகவே பார்த்துக்கொண்டிருக்கின்றோம். 

ஆகவே இவற்றை நாம் ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்த வேண்டுமாயின் அதற்கான அதிகாரங்கள் என்பது முக்கியமானது.
இப்பொழுது எமது கைவசம் இருப்பது மாகாணசபையும் பதின்மூன்றாவது திருத்த்தச் சட்டத்தின் மூலம் அதற்கு அளித்திருக்கும் அதிகாரங்கள் மாத்திரமே. 

எமக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் இருக்கின்ற மாகாணசபை அதிகாரங்களை எடுத்துக்கொண்டு இயன்றவரை தமிழ் மண்ணையும் மக்களையும் காப்பாற்றிக்கொண்டு அடுத்த கட்டம் நோக்கி நகர்வதே புத்திசாலித்தனமானது. இவை பற்றி பேசி ஒரு பொது உடன்பாட்டிற்கு வருவதே இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமானது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கருதுகின்றது.

Advertisement

 மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பாகவும் அதில் இருக்கின்ற குறை நிறை தொடர்பாகவும் மக்களுக்கு விழிப்பூட்டும் முகமாக மக்களுடன் கலந்துரையாடுவதற்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளது.

 அது மாத்திரமல்லாமல், அனைத்து மட்டங்களிலும் இருக்கக்கூடிய தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளில் அக்கறையுள்ள புத்திஜீவிகளுடனும் சமூக செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் விரும்புகின்றோம்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பத்துமாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தாமும் ஏனைய ஆளும் தரப்பினர்களைப் போன்றவர்களே என்ற தமது உண்மை முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டனர்.
தமிழ் மக்களாகிய நாம் மேற்படி விடயங்களைப் புரிந்துகொண்டு நமக்கிருக்கும் அதிகாரத்தினைக் கையகப்படுத்திக்கொண்டு எமது இலக்கை நோக்கி முன்னோக்கிச் செல்ல முயற்சிக்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எதிர்பார்க்கின்றது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1752616706.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன