பொழுதுபோக்கு
எய்ட்ஸ் இல்லனு சொல்லுங்க சார்; வீட்டுக்கு வந்த மீடியாக்கள்: தக்க பதிலடி கொடுத்த மைக் மோகன்!

எய்ட்ஸ் இல்லனு சொல்லுங்க சார்; வீட்டுக்கு வந்த மீடியாக்கள்: தக்க பதிலடி கொடுத்த மைக் மோகன்!
தமிழ் சினிமாவில் 1980, 90-களில் பல வெற்றிப் படங்களில் நடித்து வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். கமல் – ரஜினி என இரு பெரும் ஜாம்பவான்கள் இருந்த அந்தக் காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்து கோலோச்சினார். அத்துடன் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தார். ‘மைக் மோகன்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் கடந்த 1977-ல் வெளிவந்த கோகிலா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் மூலம் அறிமுகம் ஆனார். முதலே படம் பலரது கவனத்தையும் ஈர்க்க, அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்தார். ஹீரோவாக அறிமுகமாகியது முதல் மூன்று வருடங்களில் தொடர்ந்து 300 நாட்கள் ஓடிய 3 வெற்றிப்படங்களை கொடுத்த ஒரே ஹீரோ என்ற பெருமையை மோகன் பெற்றார்.இதேபோல், ஒரு வருடத்தில் 19 படங்களில் தினமும் 18 மணி நேரம் நடித்து, ஒரே நாளில் 3 படங்கள் வெளியாகி வெற்றிவிழா கொண்டாடிய நாயகனும் இவர்தான். ஹீரோவாக புகழின் உச்சியில் இருந்தபோதே விதி என்ற படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல் 1999ம் ஆண்டு அன்புள்ள காதலன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். திரைத்துறையை விட்டு நீண்டகாலம் விலகி இருந்தபோது அச்சம் மடம் நானம், செல்வங்கள் போன்ற தொலைக்காட்சி தொடர்களை தயாரித்ததோடு சமூக சேவைகளையும் செய்து வந்துள்ளார்.மோகன் 1987 ஆம் ஆண்டு கௌரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆகாஷ் என்கிற ஒரு மகன் உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது கிடைத்தது. மோகன் கடந்த ஆண்டில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தி கோட்’ படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தான் எய்ட்ஸ் நோயால் இறந்து விட்டதாகவும், தனக்கு எய்ட்ஸ் இல்லை எனச் சொல்ல சொன்ன மீடியாக்களுக்கு அப்போது பதிலடி கொடுததாகவும் மோகன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசுகையில், “இந்த ஒரு விஷயம் நீங்கள் மறந்திருக்க கூடும். எனது ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். நான் எய்ட்ஸ் நோயால் இறந்து விட்டதாக சொன்னார்கள். அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எனது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அப்போது, ரசிகர்கள் பலர் எனது வீட்டுக்கு வந்தார்கள். அந்த நேரத்தில் மீடியாக்களில் இருந்து பலர் நேர்காணலுக்காக எனது வீட்டுக்கு வந்தார்கள். என்னிடம் அவர்கள் ‘எய்ட்ஸ் இல்லனு சொல்லுங்க சார்’ என்றார்கள். நான், ‘போங்கா இருக்கேடா, நீங்களே இருக்குன்னு சொல்லுவீங்க, நான் இல்லைன்னு சொல்லனுமா?’ என நினைத்தேன். அத்துடன், நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன் என்றேன்.” எனக் கூறி பதிலடி கொடுத்துள்ளார்.