பொழுதுபோக்கு
குஷ்பூ பேரு வருதே… என் பேரு வருமா? வைரமுத்துவிடம் விளையாட்டாக கேட்ட ரஜினிகாந்த்: இந்த ஹிட் பாட்டு அவருக்குதான்!

குஷ்பூ பேரு வருதே… என் பேரு வருமா? வைரமுத்துவிடம் விளையாட்டாக கேட்ட ரஜினிகாந்த்: இந்த ஹிட் பாட்டு அவருக்குதான்!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் உருவாகியுள்ள 171-வது படமான கூலி வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் முதல் முறையாக உருவாகியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ரஜினி நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அண்ணாமலை. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படம் பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பியது. கதை, திரைக்கதை, பாடல், டயலாக் என அனைத்துமே படு ஹிட். இன்று டி.வி-யில் போட்டால் கூட அதனை கண்டு ரசிக்க ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு பெரும் வரவேற்பை இப்படம் பெற்றது. இப்படத்தின் முதுகெலும்பாக தேவாவின் இசையும், வைரமுத்துவின் எழுத்துக்களும் இருக்கும். அறிமுக பாடல் முதல் டூயட் பாடல் வரை ரசிகர்களின் இதயங்களை இருவரும் மாறி மாறி கொள்ளை அடித்து இருப்பார்கள். குறிப்பாக, அண்ணாமலையின் எழுச்சிக்காக வரும் ‘வெற்றி நிச்சயம்’ பாடல் கேட்டுக்குபோதே புல்லரிக்கும். அதிலும் ‘அடே நண்பா உண்மை சொல்வேன்; சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்’ என்ற வரிகள், தங்களது நண்பர்களால் தோற்கடிப்பட்டு எழுச்சிக்கு காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் கச்சிதமாக பொருந்தும் வகையில் இருக்கும். அண்ணாமலை படத்தில் வரும் 2-வது டூயட் பாடல் கொண்டையில் தாழம் பூ. இப்பாடலில் ரஜினி மற்றும் குஷ்பூ பெயர் இடம் பெற்று இருக்கும். ஆனால், பாடல் எழுதும் போது முதலில் ‘குஷ்பூ’ பெயர் வரும்படி தான் வைரமுத்து எழுதியதாகவும், தனது பெயர் எங்கே என ரஜினி விளையாட்டாக கேட்க, அவரது பெயரையும் சேர்த்து எழுதியதாகவும் வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து பேட்டி ஒன்றில் பேசுகையில், “இந்த பாடல் நான் எழுதி முடித்து விட்டேன். அதன் பல்லவியில் ‘கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ’ என்று எழுதி இருந்தேன். எல்லோரும் அந்த அம்மா பெயர் வருதே நன்றாக இருக்குமா? எனக் கேள்வி எழுப்பினார்கள். நான் அப்படியே போடுங்கள், விசில் பறக்கும் பாருங்கள் என்று சொல்லிவிட்டேன். ஆனால், எல்லோரும் இப்போதைக்கு இதை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் ரஜினி வந்துவிட்டார். அப்போது தேவா சார் ரஜினிக்கு பாடலை பாடிக் காட்டினார். ரஜினி எங்களிடம் குஷ்பூ பெயர் வருமா? என்று கேட்டார். அப்படியே, ‘என் பெயரும் வருமா? என விளையாட்டாக கேட்டார். அடுத்து நான், ‘வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி’ என்று போட்டு விட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.