பொழுதுபோக்கு
தனுஷ் இட்லி கடை வச்சிட்டார், ஆனா நாங்க பரோட்டா மாஸ்டர்; தலைவன் தலைவி படம் குறித்து பாண்டிராஜ் சொன்ன தகவல்!

தனுஷ் இட்லி கடை வச்சிட்டார், ஆனா நாங்க பரோட்டா மாஸ்டர்; தலைவன் தலைவி படம் குறித்து பாண்டிராஜ் சொன்ன தகவல்!
‘தலைவன் தலைவி’ திரைப்படம் தொடர்பான பல்வேறு தகவல்களை அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் பகிர்ந்து கொண்டார். கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுடனான நேர்காணலின் போது இவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் தற்போது ஃபேமிலி டிராமா வகையான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக, இதில் காமெடி கலந்திருந்தால், ரசிகர்கள் திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்ப்பதாக விமர்சகர்கள் பலர் கூறுகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட சில படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதை நாம் பார்த்தோம்.அந்த வரிசையில் பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஜூலை 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள், ஏற்கனவே ஹிட்டாகி உள்ளன.இதைத் தொடர்ந்து, இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பாண்டிராஜ், விஜய் சேதுபதி ஆகியோர் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், படத்தின் சில சுவாரசிய தகவல்களை பாண்டிராஜ் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, “தலைவன் தலைவி திரைப்படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்துள்ளார். மற்ற கதாநாயகர்கள் பரோட்டா மாஸ்டராக நடித்துள்ளார்களா என்று நான் யோசிக்கவில்லை. என்னை பொறுத்தவரை, மற்றவர்கள் செய்ததாக இருந்தாலும், அதனை நாம் எந்த அளவிற்கு சுவாரசியமாகவும், தனித்துவமாகவும் செய்கிறோம் என்பது தான் முக்கியம்.’இட்லி கடை’ என்ற திரைப்படத்தை தனுஷ் எடுத்து வருகிறார். அப்படத்திலும் நித்யா மேனன் நடித்திருக்கிறார். அந்தப் படம் தொடர்பான அறிவிப்பு முன்னரே வெளியாகி விட்டது. எங்கள் படத்திற்கு ‘தலைவன் தலைவி ‘என்று டைட்டில் வைப்பதற்கு முன்பாக பரோட்டா மாஸ்டர் என்று படப்பிடிப்பு தளத்தில் குறிப்பிடுவோம்.இரண்டு படத்திற்கும் இடையே ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா என்று கூட நித்யா மேனனிடம் நாங்கள் கேட்கவில்லை. இப்படத்திற்காக பரோட்டா போடுவதற்கு விஜய் சேதுபதி கற்றுக் கொண்டார்” என இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். இந்த நேர்காணலின் போது நடிகர் விஜய் சேதுபதியும் உடனிருந்தார்.