பொழுதுபோக்கு
‘மை டியர் பூதம் மூசா’ ஞாபகம் இருக்கா? குடும்பஸ்தன் படத்தில் மெயின் வில்லன்; இப்போ எப்படி இருக்கார்?

‘மை டியர் பூதம் மூசா’ ஞாபகம் இருக்கா? குடும்பஸ்தன் படத்தில் மெயின் வில்லன்; இப்போ எப்படி இருக்கார்?
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில், இப்போது பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், அந்த சீரியல்கள் முடிந்தபின், அதை பற்றி யாரும் யோசிப்பதே இல்லை. அதற்கு பதிலாக அடுத்த சீரியல் ஒளிபரப்பாகும் அதை நோக்கி சென்றுவிடுவார்கள். ஆனால் 90-களில் பிறந்த குழந்தைகளுக்கு, அவர்கள் திரைப்படம் மற்றும் சீரியல்கள் பார்க்க தொடங்கிய போது ஒளிபரப்பான சீரியல்கள், திரைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது.அந்த வகையில், கடந்த 2004-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தான் மை டியர் பூதம். மாயாஜாலம் நிறைந்த இந்த சீரியல், நல்ல பூதத்திற்கும் கெட்ட சாத்தானுக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. கே.ஷண்முகம் என்பவர் இயக்கிய இந்த சீரியலில், அபிலாஷ், கௌதம், நிவேதா தாமஸ், காந்திமதி, வியட்நாம் வீடு சுந்தரம், வையாபுரி, கிங்காங், டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.ஒரு பாட்டிலில் அடைக்கப்பட்ட மூசா என்ற பூதத்தை கௌதம் கவுரி ஆகிய இருவரும் வெளியில் கொண்டு வருவார்கள். இந்த பூதம் தனது குடும்பத்தை தேடி கண்டுபிடித்து அவர்களை வில்லனின் பிடியில் இருந்து காப்பாற்றுவது தான் இந்த சீரியலின் திரைக்கதை. இந்த சீரியலில், மூசா என்ற மெயின் கேரக்டரில் நடித்து 90-எஸ் கிட்ஸ்கள் மத்தியில் இன்றும் வரவேற்பை பெற்று வரும் நடிகர் தான் அபிலாஷ். 1995-ம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த அபிலாஷ், 2004-ம் ஆண்டு தெலுங்கு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.தொடர்ந்து அதே ஆண்டு, மை டியர் பூதம் தொடரிலும் நடித்த குழந்தைகள் மத்தியில் கவனம் ஈர்த்தார். 3 ஆண்டுகள் ஒளிபரப்பான மை டியர் பூதம் சீரியல், 2007-ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், அடுத்து அபிலாஷ், 2008-ம் ஆண்டு மகள், 2010-ம் ஆண்டு அபிராமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். 2010-ம் ஆண்டு கொடிமுல்லை என்ற படத்தில் நடித்த அபிலாஷ், அடுத்து 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் நாகேஷ் திரையரங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.ஆரி நடிப்பில் வெளியான நாகேஷ் திரையரங்கம் என்ற திகில் படத்தில், ஆரியின் தம்பி கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு தோனி கபடிக்குழு படத்தில் ஹீரோவாக நடித்திருந்த அபிலாஷ், அடுத்து சினிமாவில் நடிக்காத நிலையில், 2021-ம் ஆண்டு லட்சுமி ராய் நடிப்பில் வெளியான சின்ரல்லா என்ற படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றினார். அதன்பிறகு வேறு படங்களில் வேலை செய்யாத அபிலாஷ், சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.ஜனவரி மாதம் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த மணிகண்டனின் குடும்பஸ்தன் படத்தில் மாணிக்சந்த் என்ற கேரக்டரில் அபிலாஷ் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், படத்தில் நிர்வாக தயாரிப்பாளராகத்தான் சென்றுள்ளார். நடிப்பில் இருந்து விலகிய அவரை, படத்தின் திரைக்கதை ஆசிரியர் பிரசன்னா தான் இந்த கேரக்டரில் நடிக்குமாறு அழைத்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.