பொழுதுபோக்கு
ரூ.9 கோடி இழப்பீடு: ரவி மோகன் தொடர்ந்த வழக்கு; ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ரூ.9 கோடி இழப்பீடு: ரவி மோகன் தொடர்ந்த வழக்கு; ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ரூ. 9 கோடி இழப்பீடு கோரி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.’பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டு திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிகர் ரவி மோகனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக, 80 நாட்கள் கால்ஷீட்டை, நடிகர் ரவி மோகன் ஒதுக்கியுள்ளார்.ஆனால், ஒப்பந்தத்தின் அடிப்படையில் கால்ஷீட் ஒதுக்கிய பின்னரும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் படப்படிப்பு நடத்தவில்லை எனவும், இதனால் மற்ற படங்களில் நடிக்க முடியாமல் போனதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவி மோகன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தயாரிப்பு நிறுவனத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், மார்ச் முதல் ஜூன் மாதம் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு கால்ஷீட் ஒதுக்கிய நிலையில், படப்பிடிப்பை தொடங்காததால் அந்த ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது எனவும், இதன் காரணமாக அப்படத்தில் இருந்து விலகியதாகவும் தனது மனுவில் ரவி மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் அளித்த நிலையில், படத்தில் நடிப்பதற்கு முன்பணமாக கொடுத்த ரூ. 6 கோடியை திருப்பி தர வேண்டும் என தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.இதனிடையே, ‘பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தில் இருந்து ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும், வெளிடவும் தடை விதிக்க வேண்டும் என்று ரவி மோகன் கோரிக்கை விடுத்துள்ளார். தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ரூ. 9 கோடி வழங்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரி தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கின் விசாரணை இன்று (ஜூலை 16) நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, “முன்பணத்தை திருப்பி கொடுக்க நடிகர் ரவி மோகன் தயாராக உள்ளார். அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த பின் அத்தொகையை கொடுப்பதாகக் கூறிய போதும், 7 நாட்களில் முன்பணத்தை திருப்பித்தர கேட்கின்றனர். இதனால் அவரால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை” என்று ரவி மோகன் தரப்பு வழக்கறிஞர் கார்த்திகை பாலன் எடுத்துரைத்தார்.ஆனால், “ரவி மோகன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. தயாரிப்பு நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தை மீறு பராசக்தி படத்தில் அவர் நடித்துள்ளார் என்று ‘பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட்’ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ். ராமன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின்னர், ரவி மோகன் தாக்கல் செய்த மனுவுக்கு உரிய பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஜூலை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்குடன், ரவி மோகனின் மனுவையும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.