பொழுதுபோக்கு
14 நாளில் உருவான எம்.ஜி.ஆர் படம்; பாடல் எழுத முடியாமல் திணறிய வாலி; டெலிபோனில் வரிகள் சொன்ன கண்ணதாசன்!

14 நாளில் உருவான எம்.ஜி.ஆர் படம்; பாடல் எழுத முடியாமல் திணறிய வாலி; டெலிபோனில் வரிகள் சொன்ன கண்ணதாசன்!
எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே மோதல் போக்கு இருந்தபோது கவிஞர் வாலி பாடல் எழுத திணறியதால், கண்ணதாசன் எம்.ஜி.ஆர் படத்திற்காக பெங்களூருவில் இருந்து டெலிபோனில் பாடல் கொடுத்துள்ளார். அந்த பாடல் இன்றுவரை பெரிய ஹிட்டாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது.தமிழ் சினிமாவில் 1950- தொடங்கி 70-களின் இறுதிவரை தனது பாடல்கள் மூலம் பல தத்துவ முத்துக்களை அள்ளிக்கொடுத்தவர் கண்ணதாசன். இன்பம் துன்பம், காதல், சோகம், என நவரசங்களையும் தனது பாடல் மூலம் ஒலிக்க செய்த கண்ணதாசன் எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட க்ளாசிக் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.மேலும் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்த கண்ணதாசன், கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என பன்முற திறமையுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.அதோடு மட்டுமல்லாமல் தனது பாடல்களால் தத்துவங்களை அள்ளிக்கொடுத்த கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பணியாற்றிய அத்தனை படங்களும் க்ளாசிக் சினிமாவில் உச்சம் தொட்ட படங்களாக அவற்றின் பாடல்கள் இன்னும் ரசிக்கக்கூடிய வகையில் இன்றைய வாழ்க்கைக்கு ஒத்துப்போகக்கூடியதாக உள்ளது.அந்த வகையில் 1966-ம் ஆண்டு வெளியான முகராசி படத்தில் நடந்த சுவாரஸ்யமாக சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா.இந்த படம் வெளியாகும் முன்பே, படம் வெளியானால் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் வேறு படத்திற்கு போக கூடாது அப்படி போனால் அதுவும் எம்.ஜி.ஆர் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று யோசித்து முகராசி என்ற படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. 14 நாட்களில் தயாரிக்க முடிவு செய்யப்பட்ட இந்த படத்திற்காக பாடல் கம்போசிங்கின்போது, சுடுகாட்டில் வெட்யான் பாடுவது போன்ற ஒரு பாடல் வேண்டும் என்று கேட்க, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், பாடலுக்கான டியூனை போட்டுள்ளார்.இதற்கு, கவிஞர் வாலி பல பல்லவிகளை எழுதியபோதும் தயாரிப்பாளர் சின்னப்ப தேவருக்கு திருப்தியாக இல்லை. ஒரு கட்டத்தில் வாலியால் இந்த பாடலை எழுத முடியாது என்று உறுதி செய்த அவர், கண்ணதாசனை அழைக்கலாம் என்று எம.ஜி.ஆரிடம கேட்டுள்ளார். அதற்கு எம்.ஜி.ஆரும் சம்மதம் சொல்ல, உடனடியாக கண்ணதாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கண்ணதாசன் அந்த சமயத்தில் பெங்களூருவில் இருந்துள்ளார். அவரை போனில் பிடித்த சின்னப்ப தேவர் நிலைமையை எடுத்து சொல்லி, பாடல் கேட்டுள்ளார். டெலிபோனில் கண்ணதாசன் சொல்ல சொல்ல சின்னப்பதேவர் பாடலை எழுதிக்கொள்கிறார்.இந்த பாடலை பார்த்ததும் சின்னப்ப தேவருக்கு பிடித்துபோக அதை எம்.ஜி.ஆரிடம் காட்டுகிறார். பாடலை படித்த எம்.ஜி.ஆர் நெகிழ்ந்து போய் எனக்காக ஏன் அவரை வேண்டாம் என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் அனைத்து பாடல்களையும் அவரை வைத்தே எழுதிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட முகராசி படத்தில் அனைத்து பாடல்களையும் கண்ணதாசனே எழுதியுள்ளார். அப்படி அவர் டெலிபோனில் சொன்ன பாடல் தான் ‘’உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.