இலங்கை
இலவச மசாஜ் சேவை பெற்ற மூன்று பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக பணிநீக்கம்

இலவச மசாஜ் சேவை பெற்ற மூன்று பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக பணிநீக்கம்
மாத்தறை வலயத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் அதிகாரிகள், கடமையை தவறாக பயன்படுத்தியதற்காக அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு மாத்தறை வலய பதில் பொலிஸ் அத்தியட்சகரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்புருபிட்டிய, திஹகொட மற்றும் மாவரல பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் இந்த மூன்று அதிகாரிகள், வல்கம பகுதியில் அமைந்துள்ள ஒரு மசாஜ் நிலையத்திற்குச் சென்று, அங்குள்ள முகாமையாளருடன் கடுமையான வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதுடன், சேவைகளை இலவசமாகப் பெற முயன்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், மூவரும் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பணியை தனிப்பட்ட இலாபத்திற்காக பயன்படுத்தியதோடு, பொலிஸ் நன்னடத்தை மீறி ஊழல் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதற்காகவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.