இலங்கை
செவ்வாய் கிரகத்தின் பாறை 4.3 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை

செவ்வாய் கிரகத்தின் பாறை 4.3 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை
செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய அரியவகை பாறை 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஏல நிகழ்வு புதன்கிழமை (16) சோத்பியின் நிறுவனத்தால் நடத்தப்பட்டது.
NWA 16788 என அழைக்கப்படும் இந்த விண்கல் பாறை 24.5 கிலோ எடையும் சுமார் 38.1 சென்ரி மீற்றர் நீளமும் கொண்டது என சோத்பிஸ் தெரிவித்துள்ளது.
இந்த விண்கல் பாறை 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நைஜரின் தொலைதூரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.செவ்வாய் கிரகத்தின் அடுத்த பெரிய பகுதியை விட 70% பெரியது என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்கற்கள் என்பது ஒரு சிறுகோள் அல்லது வால் நட்சத்திரம் பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சென்ற பின்னர் எஞ்சியிருக்கும் பாறையின் எச்சங்கள் ஆகும்.
சிவப்பு நிற பழுப்பு நிற பாறையான இந்த விண்கல் அரியவகையானது. பூமியில் இதுவரை சுமார் 400 செவ்வாய் கிரக விண்கற்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சோத்பியின் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது பூமியில் செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பகுதி. இது அங்கிருந்து இங்கு வருவதற்கான வாய்ப்புகள் வானியல் ரீதியாக மிகக் குறைவு”.
“பூமியின் மேற்பரப்பு சுமார் 70 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனவே இது கடலின் நடுவில் விழாமல் வரட்சியான தரைப் பகுதியில் விழுந்துள்ளமையினால் எம்மால் இதனை காணக்கிடைத்தது அதிஷ்டமே என சோத்பிஸின் அறிவியல் மற்றும் இயற்கை வரலாற்றுத் துணைத் தலைவர் கசாண்ட்ரா ஹாட்டன் தெரிவித்துள்ளார்.