விளையாட்டு
மீண்டும் மீண்டுமா… கார்ல்சனை சாய்த்த பிரக்ஞானந்தா; காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!

மீண்டும் மீண்டுமா… கார்ல்சனை சாய்த்த பிரக்ஞானந்தா; காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!
கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா களமாடினார். இதில் சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் 4.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார். மேலும் அவர் ஃப்ரீஸ்டைல் செஸ் லாஸ் வேகாஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிக்கும் பிரக்ஞானந்தா முன்னேறி அசத்தி இருக்கிறார். இதேபோல், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி-யும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகளுடன் குரூப் ஒயிட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதேநேரத்தில் எரிகைசி குரூப் பிளாக்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். பிரக்ஞானந்தாவிடம் தோல்வியைத் தழுவிய ஐந்து முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் குரூப் ஒயிட்டில் ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. அதனால், லாஸ் வேகாஸ் பட்டத்திற்கான போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். காலிறுதிப் போட்டிகள் இன்று வியாழக்கிழமை நடைபெறுகிறது. அனைத்து நாக் அவுட் போட்டிகளும் 30+30 கிளாசிக்கல் நேரம் வழங்கப்படுகிறது.