இலங்கை
யாழ். மாநகரசபை அமர்வில் மிகமுக்கியமான விவாதங்களில் சபையில் உறுப்பினர்கள் இல்லை

யாழ். மாநகரசபை அமர்வில் மிகமுக்கியமான விவாதங்களில் சபையில் உறுப்பினர்கள் இல்லை
யாழ்ப்பாணம் மாநகர சபையின் நேற்றைய அமர்வில், மிகவும் முக்கியமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றபோது, உறுப்பினர்கள் பெருமளவானோர் சபையில் இருக்கவில்லை. யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு நேற்றுக்காலை ஆரம்பித்தது. நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பிலும் நீண்ட விவாதங்கள் இடம்பெற்றன. இதனால், அமர்வு இரவு 7 மணிவரை தொடர்ந்தது. இதனால், அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது பல உறுப்பினர்கள் வெளியேறிச் சென்றனர்.
முக்கியமான விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போது பெருமளவான உறுப்பினர்கள் வெளியேறியிருந்தனர். 45 உறுப்பினர்களைக் கொண்ட மாநகரசபையில், அமர்வு முடியும் போது வெறும் 25 உறுப்பினர்களே இருந்தனர்.
நேற்றைய அமர்வின்போது, மராமத்துக்குழு, சுகாதாரக்குழு, நிதிக்குழு ஆகியவற்றில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சபையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டன. மாநகரசபை அமர்வுகளுக்கு தேவையான பணியாளர்களை நியமிப்பது தொடர்பிலும், வட்டாரங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பிலும், நல்லூர் உற்சவகாலத்தில் அமைக்கப்படும் வீதித் தடைகள் தொடர்பிலும் நீண்டநேர விவாதங்கள் இடம்பெற்றன.