பொழுதுபோக்கு
16 வயதில் அறிமுகம்; கடைசி படத்தில் கேப்டனுக்கு மனைவி, அம்மா: 34 வயதில் இறந்த இந்த நடிகை யார் தெரியுமா?

16 வயதில் அறிமுகம்; கடைசி படத்தில் கேப்டனுக்கு மனைவி, அம்மா: 34 வயதில் இறந்த இந்த நடிகை யார் தெரியுமா?
திரைத்துறையில் சிலர் எவ்வளவு பெரிய உச்சத்தை அடைந்தாலும், வாழ்க்கை எப்போதும் அவர்களுக்குச் சாதகமாக இருப்பதில்லை. வெள்ளித்திரையில் ஜொலிக்கும் பல நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை, திரைக்குப் பின்னால் பல இருண்ட பக்கங்களை தான் வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சோகமான கதைதான் நடிகை விஜியின் வாழ்க்கை. காதலில் ஏற்பட்ட துரோகத்தால் அவர் எடுத்த விபரீத முடிவு, ஒட்டுமொத்த திரையுலகையும் உலுக்கியது. 1966-ல் பிறந்த விஜி 1982-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான “கோழி கூவுது” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் பிரபு மற்றும் சில்க் ஸ்மிதா, சுரேஷ் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். குறிப்பாக இந்த படத்தில் சுரேஷ் உடன் அவர் நடனமாடிய “ஏதோ மோகம் ஏதோ தாகம்” பாடல் சூப்பர் ஹிட்டாகி, அவருக்குப் பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. இதைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் பிரபு, ரஜினிகாந்த், மோகன்லால் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து 40 படங்களுக்கும் மேல் நடித்தார்.ஒரு கட்டத்தில் முன்னணி நாயகி வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும், விஜி குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு பாடலுக்கு நடனமாடுவது போன்ற காட்சிகளிலும் நடித்தார் விஜி. அந்த வகையில், சரத்குமார் நடித்த “சூரியன்” திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் “லலக்கு டோல் டாப்பி மா” பாடலிலும், விஜய் நடித்த “பூவே உனக்காக” திரைப்படத்தில் முரளியுடன் “மச்சினிச்சி வர நேரம்” பாடலிலும் அவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனிடையே, பூவே உனக்காக” பாடலின் படப்பிடிப்பின்போது, விஜியை முதுகு வலி வாட்டியது.இதற்காக சிகிச்சை பெற்றபோது சிக்கல்கள் ஏற்பட்டு, முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக அவரது கைகால்கள் செயலிழந்து, சக்கர நாற்காலியிலேயே முடங்கினார். பின்னர், மருத்துவமனைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து வெற்றி பெற்ற அவர், பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு அவரது உடல்நிலை சற்று மேம்பட்டாலும், திரைப்பட வாய்ப்புகள் முற்றிலும் நின்றுவிட்டன. விஜியின் நிலையைப் பார்த்து மனம் உருகிய விஜயகாந்த், “சிம்மாசனம்” திரைப்படத்தில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். அதுவே அவரது கடைசிப் படமாக அமைந்தது.16 வயதில் திரையுலகில் காலடி எடுத்து வைத்த விஜியின் வாழ்க்கை, தனது 34 வயதிலேயே ஒரு சோகமான முடிவுக்கு வந்தது. 2000 ஆம் ஆண்டு, சென்னையில் உள்ள தனது வீட்டில் விஜி தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது உடல்நலக் குறைவுதான் மரணத்திற்கு காரணம் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால், அவர் எழுதி வைத்திருந்த தற்கொலைக் குறிப்பு உண்மையான காரணத்தை வெளிப்படுத்தியது.இயக்குநர் ஏ.ஆர். ரமேஷுடனான காதல் முறிவுதான் அவரது மரணத்திற்கு காரணம் என அந்தக் குறிப்பில் எழுதப்பட்டிருந்தது. ஏற்கனவே திருமணமான ரமேஷ், தன்னை மணப்பதாக உறுதியளித்துவிட்டு பின்னர் மறுத்துவிட்டதாகவும், மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் ரமேஷ் தன்னை கடுமையாக பேசியதாகவும் விஜி அந்தக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.இயக்குநரின் காதலை தான் ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரங்களையும் விஜி தனது மரணக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.இதன் அடிப்படையில், போலீசார் இயக்குநர் ரமேஷ் மற்றும் அவரது மனைவியை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தனது கடைசி குறிப்பில், தனது மரணத்திற்குப் பிறகு உடலை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் விஜி கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.